காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஏற்காது என்கிறபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிற நாட்டாமை பேச்சுக்கு. பிரதமர் மோடி தலையாட்டுவது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட விவகாரம் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீடு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தான் எப்போதும் மரபு சார்ந்த யுத்தத்தில் நம்மிடம் தோற்றுதான் வந்துள்ளது. 1965, 1971 போர்களில் இந்தியா தான் வெற்றி பெற்றது. அதன் பிறகு எப்போதும் பிராக்சி வார் தான். அதாவது மறைமுகமாக எதிரிக்கு தொல்லை கொடுப்பது. பாகிஸ்தானை பொறுத்தவரை அது தீவிரவாதிகளை அனுப்புவதுதான். எந்த ஒரு சாமதான ஒப்பந்தமும் பாகிஸ்தான் தரப்பில் எல்லையில் சண்டை இருக்காதே தவிர, நாட்டிற்குள் தீவிரவாத தாக்குதல்கள் இருக்கும். அண்மைக்கால உதாரணம் 1999 கார்கில் யுத்தம். 2001ல் நாடாளுமன்றத் தாக்குதல். மன்மோகன் சிங் பிரதமராக இருக்கிறபோது மும்பை தாக்குதல்.
பாகிஸ்தான் உலகம் முழுவதும் தீவிரவாதிகளை அனுப்புகிற நாடாக பாகிஸ்தான் செயல்படுகிறது. கூலிப்படை போன்று அவர்கள் செயல்படுகிறார்கள். சர்வதேச அளவில் கூலிப்படையாக செயல்படுபவர்கள் எல்லாம் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள்தான். எல்லா நாடுகளுக்கும் ராணுவம் இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் ராணுவத்திற்கு நாடு உள்ளது. பாகிஸ்தான் உடனான பிரச்சினைக்கு தீர்வு என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர். இந்தியாவின் நிலைப்பாடு என்பது காஷ்மீர் நமக்கு சொந்தமானது ஆகும். இதில் மூன்றாவது நாடு தலையீட்டை இந்தியா எப்போதும் ஆதரிப்பது கிடையாது. கந்தஹார் விமானக் கடத்தலில் மூளையாக செயல்பட்ட நபர்தான் இன்றைக்கு பகவல்பூர் தீவிரவாத முகாமுக்கு காரணம். அந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செலுத்துகிறது. பாகிஸ்தான் கொடி போற்றப்படுகிறது. இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.
பாகிஸ்தான் அணு குண்டை வீசிவிடும் என்கிற பயம் உலக நாடுகளுக்கு உள்ளது. அவர்களிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. அதனை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளும் அவர்களிடம் உள்ளன. நம்மிடமும் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடு என்பது பாகிஸ்தானிடம் மிகவும் சாதாரணமாக உள்ளது. அணு குண்டு வைத்திருந்தால் மட்டும் போதாது. அதை வீசக்கூடிய வல்லமை மற்றும் அதற்குரிய கட்டமைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் அது பாகிஸ்தானிடம் இல்லை என்பதுதான் உலகத்தால் நம்பப்படுகிற விஷயமாகும். டிரோன் தொழில்நுட்பத்தில் நம்மிடம் உள்ளது மிகச் சிறந்தவையாக பார்க்கப் படுகின்றன. ஏனென்றால் பாகிஸ்தான் உபயோகித்த துருக்கி, சீனாவின் டிரோன்கள் தோல்வி அடைந்தன. அதேவேளையில் இந்தியாவின் டிரோன்கள் வலிமையாக இருந்தன. இந்தியாவின் ராணுவம், ராணுவத்தின் கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தலைமை என்பது மிக மிக மேம்பட்டதாகும். அப்போது அரசியல் தலைமைதான் நாம் பார்க்க வேண்டும். மோடியின் அரசியல் தலைமை இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் சரியாக செயல்படவில்லை என்பது பொது அபிப்பிராயம் ஆகும்.
அமெரிக்கா யுத்த காலங்களில் என்றைக்கும் இந்தியாவின் பக்கம் நின்றது கிடையாது. 1965, 1971 மற்றும் கார்கில் போர்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே அமெரிக்கா நடந்துகொண்டது. 1971 வங்கதேச போரின்போது பாகிஸ்தானை காப்பாற்றத்தான் அமெரிக்கா முயற்சித்தது. அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசத்தில் 1970ஆம் ஆண்டில் ஷேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் மேற்கு பாகிஸ்தான் அவர்களை ஆட்சி அமைக்க அனுமதிக்கவில்லை. பின்னர் ராணுவத்தை அனுப்பி அடக்கு முறைகளை கையாண்டார்கள். இதில் லட்சக்கணக்கில் மரணம் நிகழ்ந்தது. லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்கு அதிகளாக வந்தனர். பின்னர் அது வங்கதேச சுதந்திர போராட்டமாக மாறியது.
அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தார். அப்போதைய அமெரிக்க அதிபர், இது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம். நீங்கள் சிறிய அளவிலான ராணுவத்தை வைத்துக்கொண்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள் என்று அவமானப் படுத்தினார். கடைசியில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டு பாகிஸ்தான் இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டபோது, அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்பியது. ஆனால் அந்த மிரட்டலுக்கு பணியாத இந்திரா காந்தி, ரஷ்யா அமைதி ஒப்பந்தத்தை பயன்படுத்தினார். அதனபடி ரஷ்ய போர்க்கப்பல்கள் இந்தியா நோக்கி நகர்ந்தது. அது மிகப்பெரிய பிரச்சினையாக அந்த காலகட்டத்தில் வந்தது. அதற்குள்ளாக புதிய வங்கதேசம் பிறந்துவிட்டது. அமெரிக்காவின் பொய் அம்பலப்பட்டது. அன்றைய அமெரிக்க அதிபர் அவமானப்பட்டார்.
தற்போது போன்ற போர் சூழல் தான், அப்போதும் இருந்தது. அதிலும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் இருந்தது. எப்படி வங்கதேச பிரச்சினை இருந்ததோ, அதுபோல தற்போது பலூசிஸ்தான் பிரச்சினை உள்ளது. உருது மொழி பேசுகிற மக்கள், பலூச் மலைவாழ் மக்களின் கலச்சாரத்தை அழிக்கப்பார்த்தார்கள். அதனால்தான் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த போரை தொடர்ந்து இருந்தால், தனி பலூசிஸ்தான் பிறந்திருக்கும். மோடி எந்த இடத்தில் தவறு செய்தார் என்றால் அமெரிக்காவை நம்பியிருக்கக் கூடாது. அவர்கள் எப்போதும் அவர்களது பொருளாதாரத்தை பார்ப்பார்கள்.
போர் நிறுத்தம் செய்ததால் இனி தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துவிடுமா? 1965 தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்கு பிறகு பாகிஸ்தானின் தீவிரவாத அத்துமீறல்கள் மிக மிக அதிகமாகும். தற்போது போரை நிறுத்த சொல்லி அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கெஞ்சியுள்ளது தெரிகிறது. பாகிஸ்தானின் போர் தளவாடங்களே போய்விட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படி உள்ளபோது பாகிஸ்தானை சர்வதேச அளவில் கட்டுப்படுத்தும் விதமான செயலை செய்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளும் இருந்தது.
டிரம்புக்கு நல்ல எண்ணம் இருந்தால், போர் நிறுத்த அறிவிப்பை இந்தியா அல்லது பாகிஸ்தான் வெளியிட்டும் என்று விட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஊர் அரசியலுக்காக அவர் போர் நிறுத்ததை அறிவிக்கிறார். காஷ்மீர் ஆயிரம் ஆண்டு பிரச்சினை என்கிறார். 1947ல் காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்க விரும்பியது. ஆனால் பாகிஸ்தானின் நெருக்குதல் காரணமாக மன்னர் இந்தியாவுடன் இணைய விரும்பினார். ஒப்பந்தம் போட்ட பின்னர், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியது. அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகும். அங்கு எல்லைக் கட்டுப்பாட்டு கோடுதான் உள்ளது. அதை சர்வதேச எல்லையாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சொல்கிறது. அப்படி செய்தால் அது பாகிஸ்தானின் பகுதி என்று அங்கீகரிக்கப்படும். எனவே இந்த விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீட்டை இந்தியா ஏற்காது. அப்போது டிரம்ப் சொல்கிற நாட்டாமை பேச்சுக்கு மோடி தலையாட்டுவது ஏன் என்பதுதான் கேள்வியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.