Homeசெய்திகள்கட்டுரைநான் படித்த பெரியார் - என்.கே.மூர்த்தி

நான் படித்த பெரியார் – என்.கே.மூர்த்தி

-

யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே – பெரியார்.

தந்தை பெரியார் அவர்களின் பேச்சுகளும் எழுத்துக்களும் 1925 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தான் தமிழக மக்கள் கேட்டும், படித்தும் அதனால் பாதிக்கப்பட்டும், பின்பற்றப்பட்டு, ஆராய்ச்சி செய்தும் வருகின்றனர்.

பெரியாரின் பள்ளிப்படிப்பு என்பது மூன்றாண்டு காலத் திண்ணைப் பள்ளிக்கல்வியோடும், இரண்டாண்டு காலம் ஆரம்பப் பள்ளிக் கல்வியோடும், 11 வயதில் முடிவுற்றது.
தந்தை பெரியார்

இங்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், இயக்கங்கள், கிளர்ச்சிகள், சாதனைகள் ஆகியவற்றை சுருக்கமாக காணுவது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு மிகவும் அவசியம் என்று கருதி இதை எழுதுகிறேன்.

பெரியாரின் பள்ளிப்படிப்பு என்பது மூன்றாண்டு காலத் திண்ணைப் பள்ளிக்கல்வியோடும், இரண்டாண்டு காலம் ஆரம்பப் பள்ளிக் கல்வியோடும், 11 வயதில் முடிவுற்றது. அந்தக்காலத்தில் நம் சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரும் கடவுள், மத, சாஸ்திர, புராண நம்பிக்கைகளுக்கு பெரிதும் அடிமைப்பட்டு இருந்தனர். [இன்றும் அது தொடர்கிறது]

இந்து மதத்தின் வைதீகக் கொள்கைகளைப் போற்றுவதும் அதை பின்பற்றுவதும் தங்களை உயர்ந்த மனிதர்களாக்கிக் கொள்வதற்குச் சரியான வழியென்று ‘பெரிய மனிதர்கள்’ என்பவர்களும் ‘படிப்பாளிகள்’ எனப் போற்றப்பட்டோரும் ‘மேல் சாதி மக்கள்’ எனக் கூறிக்கொண்டவர்களும் அக்காலத்தில் கருதினர். மதம் என்பதின் பேராலும் சமுதாயப் பழக்க வழக்கம் என்பதன் பேராலும் பார்ப்பனர்கள் – தமிழர்களின் மத குருவாகவும், மதத் தலைவராகவும் ஆதிக்கம் கொண்டு விளங்கினர்.

அப்போது நூற்றுக்கு ஏழு பேர் மட்டுமே படிப்பறிவு பெற்று இருந்தனர். அதிலும் பார்ப்பனர் மூவர். கிறிஸ்தவர் ஒருவர், சாதி இந்துக்கள் இருவர், பிறர் ஒருவர் என்ற அளவில் பெரும்பாலானோருக்கு கல்வி அறிவு இல்லாமல் இருந்தது.

நூற்றுக்கு ஏழு பேர் மட்டுமே படிப்பறிவு பெற்று இருந்தனர்.
கல்வி கொள்கை

அந்த காலத்தின் ஆட்சியாளர்களின் கல்வி கொள்கை என்பது சூத்திரனுக்கு அறிவு கொடுக்கக் கூடாது என்பதுதான். வெள்ளையர் ஆட்சியிலும் கிபி 1800 க்குப் பின்னர் படித்தவர்கள் என்றால் பார்ப்பனர் என்ற நிலைமை மட்டுமே இருந்ததால் அரசு அலுவல் துறைகள் அனைத்திலும் பார்ப்பனர் மட்டுமே ஆதிக்கம் பெற்றிருந்தனர்.

அலுவலகங்களில் படிப்புத் தகுதியின் அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்ய நேர்ந்தவுடன் கல்வித்தகுதி பெற வாய்ப்பில்லாதவர்களாக ஆக்கப்பட்டிருந்த அனைத்துச் சமுதாயத்தினரும் அரசு துறையில் ஒதுக்கப்பட்டனர்.

சமுதாயத்தில் பெரும்பான்மையினராக இருந்த சூத்திரர் எனப்படுவோர் பார்ப்பனர்களால் தீண்ட தகாதவர் என கருதப்பட்டனர். பார்பபனர் புழங்கும் பொது இடங்களில் – உணவு விடுதிகள், கோவில்கள் போன்ற அனைத்திலும் சூத்திரர் புழங்கக் கூடாதவர்களாக ஆக்கப்பட்டனர். பார்ப்பனர் அனுபவித்த உரிமைகள் எதனையும் எந்த துறையிலும் சூத்திரர் அனுபவிக்க இயலாது என்ற நிலை உருவாக்கப் பட்டிருந்தது.

தந்தை பெரியார்

கோவில்களை கட்டி முடிப்பவர் – சூத்திரர். ஆனால் கோவில் குடமுழுக்கு நீர் ஊற்றுபவர், கோவிலில் அர்ச்சனை செய்பவர், ரதத்தில் சிலையோடு அமர்ந்து ஊர்வலம் வருபவர் என்று அனைத்திலும் பார்ப்பனர் என்ற நிலைமை இருந்தது.

ஒருவர் வசதியுடைய வராக இருந்தாலும் அல்லது எந்த சாதிக்கு உரியவரையும் வா போ என்றும் வாடா போடா என்றும் பார்ப்பனர்கள் அழைக்கும் நிலைக்கு நம் மக்கள் இழிவான நிலையில் இருந்தனர். தமிழர் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திலும் பார்ப்பனர் குரு இல்லாமல் நடைபெறாது என்ற நிலை இருந்தது.

தீண்டப்படாதவர் எனப்படும் பள்ளர், பறையர் முதலானோர் வேறு எந்த சாதியினராலும் தீண்டப்படாதராகவே நடத்தப்பட்டனர். பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத மேல் சாதி மக்களும் புழங்கும் எந்த பொது இடத்திலும் பள்ளரும் பறையரும் புழங்கக்கூடாது. சில தெருக்களில் நடக்கக்கூடாது. மாட்டு வண்டியில் உட்கார்ந்து செல்வதோ, தோலில் துண்டு போட்டுக் கொள்வதோ, செருப்புகள் அணிந்து போவதோ, குடை பிடித்துச் செல்வதோ பொது கிணற்றிலும் குளத்திலும் குளிப்பதோ, அந்த நீரை அருந்துவதோ கூடாது. எங்கேயாவது அரிதாகக் காணப்படும் தண்ணீர்ப் பந்தல்கள், தேநீர் கடைகளில் கூட மூங்கில் குழாயில் ஊற்றப்படும் காபி, மோர், நீர் இவற்றைக் தேங்காய் கொட்டங்களில் வாங்கிக் குடித்துச் செல்ல வேண்டும் என்பதே அனைத்து ஊரினரும் கடைபிடித்து வந்த சமுதாய நெறியாக இருந்தது.

பறையரும் பள்ளரும் – பார்ப்பனர்களால் காணத் தகாதவர்களாக, அண்டத் தகாதவர்களாக, தீண்டத் தகாதவர்களாக கருதப்பட்டனர்.
தந்தை பெரியார்

பறையரும் பள்ளரும் – பார்ப்பனர்களால் காணத் தகாதவர்களாக, அண்டத் தகாதவர்களாக, தீண்டத் தகாதவர்களாக கருதப்பட்டனர். ஒற்றையடிப் பாதைகள் எதிர் திசையில் பார்ப்பனரை சந்திக்கும் பறையர் முதலானோர் கூப்பிடு தூரம் ஒதுங்கியோடி மறைந்து நடக்க வேண்டும். பறையர் எனப்படுவோர் முழங்காலுக்குக் கீழ் தொங்கும்படி துணி அணியக் கூடாது, தோளில் துண்டு போடாக் கூடாது. உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. தங்க நகைகளை விரும்பி பெறுதல் கூடாது, மண் சுவரும் ஓலைக் குடிசையும் தவிர வேறு வகையான வீடு பெற விரும்பக் கூடாது. மொத்தத்தில் எந்தச் சுதந்திரமும் உரிமையும் பெறக்கூடாதவராய் அடிமை வேலை செய்தே வாழ வேண்டும் என்ற இழிவுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.

சில சூத்திர சாதிப் பெண்களும், ஆதித் திராவிட பெண்களும் மாராப்புத் துணி போடுவதும், சட்டை போடுவதும் மேல் சாதியினர் என்பவர்களை அவமரியாதை செய்வதாகக் கருதப்பட்டது.

மனிதப் பிறவியில் பெண்கள் இழி பிறவிகள் எனவும், ஆண்களோடு சம உரிமை பெற அறுகதையற்றவர்கள் எனவும் அனைவரும் நடத்தினர்.
Periyar

மனிதப் பிறவியில் பெண்கள் இழி பிறவிகள் எனவும், ஆண்களோடு சம உரிமை பெற அறுகதையற்றவர்கள் எனவும் அனைவரும் நடத்தினர். கேட்கவும் படிக்கவும் நெஞ்சு பொறுக்காத இந்த இழிநிலை சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், நவாபுகள் ஆகிய அனைவரின் ஆட்சிக்காலங்களிலும் இருந்தது. இந்தக் கோரா நிலைக்குப் பரிகாரம் தேட முயன்ற வெள்ளையரை, பார்ப்பனர்கள் எதிர்த்தனர். அவர்களோடு சேர்ந்து பணக்காரர்கள் எதிர்த்தனர். இந்த அமைப்பு முறைகளை எதையும் மாற்றக்கூடாது. இதில் பிரிட்டிஷார் தலையிடக்கூடாது என்ற உறுதிமொழியினை கிபி 1773, 1857 ஆண்டுகளில் அதிகாரபூர்வமாக பார்ப்பனர்கள் பெற்றனர்.

இதுபோன்ற இருண்டு கிடந்த சமுதாய அமைப்பையும், அறியாமை இருளையும், சமூக இழிவுகளையும் சுட்டெரிக்கும் சூரியனாக அந்த காலக்கட்டத்தில் தோன்றியவர் தான் தந்தை பெரியார்.

தமிழ் நாட்டில் ஈரோட்டில் 1879 செப்டம்பர் 17 – இல் பிறந்தார்.

(தொடரும்)

MUST READ