விஜய் அரசியல் ரீதியாக நிறைய தவறுகளை செய்துவிட்டார் என்றும், அவர் இனி பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கரூர் கூட்டநெரில் வழக்கில் விஜய் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- விஜய் 12ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ள நிலையில், அவருடைய பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முதலமைச்சர் விஜய்க்கு வக்காலத்து வாங்கும் விதமாக தான் மத்திய அரசின் துறைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு அரசியல்வாதியாக அனைத்து நிகழ்வுகளுக்கும் முதலமைச்சர் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்.
இந்தியன் எவிடன்ஸ் சட்டத்தின்படி குற்றச்சம்பத்தில் தொடர்புடைய வாகனத்தை கைப்பற்றுவது நடைமுறையாகும். கரூர் சம்பவத்திற்கு அடுத்த சில நாட்களிலேயே விஜய் வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டும். காரணம் அதில் சிசிடிவி கேமரா உள்ளது. அதில் முக்கியமான ஆவணங்கள் உள்ளன. விஜய் விசாரணைக்கு செல்லும்போது அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது என்று எந்த சட்டமும் கிடையாது. ஏன் விஜயை கைது செய்யவும் சாத்தியம் உள்ளது. ஏனென்றால் கூட்டநெரிசல் சம்பவம் நடைபெற்றபோது விஜய் அங்கேதான் இருந்தார். பாசிச பாஜக என்று விஜய் சொன்னார். பாசிசம் அவர்களின் வேலையை காட்ட வேண்டுமல்லவா?

அரசியல் ரீதியாக விஜய் நிறைய தவறுகளை செய்தார். அதற்கு ஏற்றாற்போல் இனி பின்னடைவுகளை சந்திப்பார். கடந்த காலங்களில் விஜய் தான் திமுகவுக்கு மாற்று சக்தி. அவர்தான் இரண்டாவது இடத்தை பிடிப்பார். அசந்தால் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று பல்வேறு தரப்பினரும் புகழ்ந்து பேசினர். இனி அந்த பார்வை மெல்ல மெல்ல மாற தொடங்கும். கரூரில் ஒரு கூட்டத்தை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு மோசமான உதாரணமாக இருந்தார். இரண்டாவது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் திரும்பி வந்தார். சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து பேசியபோது அதற்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை.
ஜனநாயகன் பட பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகிற போதும் அவர் நன்றி தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்த், அஜித் ரசிர்களிடம் தொண்டர்கள் பிரச்சினை செய்தபோது அதை தடுத்திருக்கலாம். அப்படி விஜய் செய்திருந்தால் அவருக்கு இன்றைக்கு ஆதரவாக எல்லோரும் வந்திருப்பார்கள். விஜய் தன்னை சார்ந்தவர்களின் பிரச்சினைகளுக்கும் எதுவும் செய்யவில்லை. தற்போது தன்னுடைய பிரச்சினைக்கும் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. ஒரு கெட்ட நேரம். விஜய் அரசியல் ரீதியாக நண்பர்களை சம்பாதிக்கவில்லை.

விஜய் பார்வையில் திமுக அடிக்கிறது. பாஜக அடிக்கிறது. ஆனால் அவரால் சொல்ல முடியவில்லை. அதிமுக இன்னும் அடிக்க தொடங்கவில்லை. தேர்தல் நேரத்தில் அவர்களும் அடிக்க தொடங்குவார்கள். இதற்கு மத்தியில் சீமான் தானும் தாக்குவேன் என்று அவர் பங்கிற்கு அடிப்பார். இந்த பல்முனை தாக்குதலை விஜயால் எதிர்கொள்ள முடியாமல் வருங்காலங்களில் சிரமப்படுவார். தற்போது மாற்றுக்கட்சிகளில் இருந்து வருபவர்களை எல்லாம் சேர்க்கிறார்கள். அதேபோல், மற்ற கட்சிகள் விட்டமின் எம், விட்டமின் சி போன்றவற்றை போட்டால் காந்தம் போன்று இழுத்துவிடுவார்கள். இனிமேல் நேரம் கிடையாது. பொங்கல் முடிந்ததும் விசாரணை.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட்டால் பிரச்சினையாகும். விஜய் தனித்து போட்டியிட்டால் பாஜக, அதிமுக போன்றவை ஏன் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். பாஜக தரும் சிக்கல்கள் காரணமாக விஜய், பாஜகவை எதிர்ப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர் எப்போது பாஜகவை எதிர்த்தார்? தன்னை யார் தாக்குகிறார்கள் என்று விஜய் சொல்ல வேண்டியது தானே? அதை சொல்லக்கூடிய தைரியம் கூட இல்லாவிட்டால் எப்படி எதிர்ப்பாகும்.

கரூர் விவகாரம் டெல்லிக்கு போனால் பிரச்சினையாகும் என்று தொடக்கத்திலேயே நாம் எச்சரித்தோம். விஜய் கூட்டணிக்கு சென்றால், பாஜக அவர்களுக்கு ஆதரவளிக்கும். பாஜகவிடம் இருந்து வரும் அழுத்தம் காரணமாக விஜய் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அனுதாபம் பெருகும். அதேவேளையில், மக்கள் விஜய் ஏதாவது செய்தால்தான் வாக்களிப்பார்கள். தொண்டர்களும், ரசிகர்களும் அப்படியே இருப்பார்கள். ஆனால் விஜய் ஆட்சிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்வது மக்கள் தான். அப்படிபட்ட மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு விஜய் என்ன செய்தார்?
பரந்தூர் விவகாரம், தூய்மை பணியாளர் போராட்டம் குறித்து விஜய் குரல் கொடுத்தாரே தவிர வேறு என்ன செய்தார்? அவர்களை வீட்டிற்கு அழைத்து பேசினார். இதுபோன்ற தவறான முன்னுதாரணங்கள். தவறான அரசியல் எடுத்துக்காட்டுகள். தவறான சிந்தனைகள், தவறான பாதைகளில் அவர் பயணிக்கிறார். ஒரு நல்ல அரசியல் தலைவருடன் பழகினால் அவருக்கு அதே குண நலன் வரும். குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


