அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக விரைவில் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித்ஷா – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு என்பது திட்டமிடப்பட்ட சந்திப்பாகும். இந்த சந்திப்புக்கு முன்னதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதற்கு பிறகுதான் எடப்பாடி பழனிசாமி அரசியலில் எங்களுக்கு திமுக மட்டும்தான் ஒரே எதிரி என்ற ஒற்றை கோஷத்தை சொன்னார். பாஜக உடன் கூட்டணியா? என்ற கேள்வியை மறுக்காமல் சென்றார். முன்பு எஸ்டிபிஐ மாநாட்டில் பேசியபோது பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக பெரியளவில் எடுத்துச்சென்று, மக்களிடையே பாஜகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. பாஜகவை தமிழக மக்கள் முற்றிலும் நிராகரித்து விட்டார்கள் என்கிற மனநிலை டெல்லியில் உருவாகிறது.
அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு, எப்படியாவது மத்திய அமைச்சராக வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. நிறைய கல்வி நிறுவனங்களை நடத்துவதால் அதற்கான தேவை உள்ளது. பாஜக உறவை துண்டித்ததில் அவருக்கு வருத்தம் இருந்து வந்தது. இந்நிலையில் தான் எடப்பாடியின் உறவினர் ராமலிங்கம் என்பவரது வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை தொடர்பான விவகாரங்களை சேகரித்த அமித்ஷா அதில் கூறப்பட்டுள்ள ஒரு விஷயத்தை சதாசிவத்திடம் சொல்லி எடப்பாடியிடம் அனுப்பினார். இதன் காரணமாக உடனடியான அலறி அடித்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சென்று சந்தித்தார். 25 நிமிடங்கள் தான் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றவர்கள் உடன் இருந்தனர். பின்னர் இருவரும் தனியாகத்தான் பேசினார்கள். அப்போது, அமித்ஷா ஒரு மணிநேரம் எடப்பாடி பழனிசாக்கு ரெய்டு விட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திடம் இருந்து ரூ.650 கோடி பணத்தை பிடித்துள்ளனர். அந்த பணம் முழுவதும் எடப்பாடிக்கு சொந்தமானதாகும். எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், அவரது தொழில் நிறுவனத்தில் மறைமுக தொழில் கூட்டாளி ஆக உள்ளார். அதுதான் இவர்களுடைய பிரச்சினையாகும். அமித்ஷா, முன்னாள் நீதிபதி சதாசிவத்திடம் சொன்னது என்ன என்றால், அமித்ஷா நினைத்தால் உங்களை சிறைக்குள் தள்ளிட முடியும். இரட்டை இலையை பறித்து சசிகலா, அல்லது ஓபிஎஸ் இடம் வழங்கிட முடியும். நீங்கள் சிறைக்கு சென்றால் கட்சி உங்களை விட்டு போய்விடும். நீங்கள் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவீர்கள் என்று சொல்லியுள்ளார். இதன் காரணமாகவே எடப்பாடி அமைதியாக டெல்லிக்கு செல்கிறார். அமித்ஷா ஒரு மணி நேரம் இந்த தகவல்களை எல்லாம் விளக்கியுள்ளார். ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் டெலிபோன் உரையாடல்களை டிகோட் செய்ததில் எடப்பாடி பழனிசாமியின் போனும் உள்ளது. அதை இன்றுவரை டிராய் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் எடப்பாடி சிறைக்கு செல்வது உறுதியாகும். எனவே பாஜக உடன் கூட்டணிக்கு வாங்க. இல்லாவிட்டால் சிறைக்கு செல்லுங்கள் என்று அமித்ஷா மிரட்டியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி மாதம் அனைவரும் ஒன்று கூட உள்ளனர். சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைந்து, கட்சிக்குள் ஒரு கூட்டு நடவடிக்கைக்குழு ஏற்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கான அச்சாரமும் இந்த சந்திப்பின்போது போடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, தனக்கு பின்னால் உண்மையான அதிமுக என்கிற பெயரில் ஒரு பெரிய படைபலத்தை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அண்ணாமலை தலைமையில் தென் மாவட்டங்களில் உள்ள அதிமுகவினரை பாஜக சேகரித்து வைத்துள்ளது. அதுதான் 18 சதவீத வாக்குகளாகும். ஆனால் விஜய பிரபாகரன் போட்டியிட்ட, விருதுநகர் தொகுதியை தவிர வேறு எங்கும் அதிமுக சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அதிமுக வசம் 20 சதவீத வாக்குகள் உள்ளன.

அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி காவிரி -கோதாவரி இணைப்புத்திட்டம், முல்லைப் பெரியாறு அணை, மேகதாது விவகாரங்கள் மற்றும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசியதாக சொல்கிறார். கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதா? என்கிறபோது எரிச்சல் அடைந்த எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. கடந்த முறை தேர்தல் நெருக்கத்தில்தான் கூட்டணி பேசினோம் என்று சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிசாமி சந்திப்பிற்கு பின்னர் அமித்ஷா வெளிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று சொல்லியுள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை கணிசமான சீட்டுகள் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் திட்டமும் பாஜகவிடம் உள்ளது. எது எப்படியானாலும் அதிமுகவால் இனி தப்பிக்க முடியாது. அந்த பின்னணியில்தான் எடப்பாடி பழனிசாமி சோகத்துடன் வந்தார், இவ்வாறு அவர் தெரிவித்தார்