spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅப்ப கொங்கு மண்டலம்... இப்போ வடதமிழ்நாடா...? செந்தில்பாலாஜியால் அப்செட்டில் பாமக!

அப்ப கொங்கு மண்டலம்… இப்போ வடதமிழ்நாடா…? செந்தில்பாலாஜியால் அப்செட்டில் பாமக!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் சேர முடியாத விரக்தியில் பாமகவினர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மீது அவதூறுகளை பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற தெரிவித்துள்ள கருத்தை சுட்டிக்காட்டி அவரை பதவிநீக்கம் செய்யுமாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இதேபோல், விழுப்புரத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த மூத்த அமைச்சர் பொன்முடி மீது போராட்டக்காரர்கள் சேறு வீசிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு சம்பவத்திற்கு பாமகவே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

senthilbalaji

அதில் ஆளுர் ஷாநவாஸ் கூறியிருப்பதாவது :- போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஜாமின் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு முன்னர் வகித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்தும், அதனை ரத்து செய்யக்கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ம், பிணையில் விடுதலையான அடுத்த நாளிலேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டதை ஏற்க முடியவில்லை என தெரிவித்தது. மேலும், சாட்சிகள் அச்சத்தில் உள்ளனரா என உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது என்றும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாலேயே மக்கள் பிரதிநிதியாக உள்ள செந்தில்பாலாஜியை  அமைச்சராக்க கூடாது என சொல்ல சட்டத்தில் இடமில்லை. முதலமைச்சர் விரும்பும் ஒருவரை அமைச்சராக்கும் அதிகாரம் உள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது மருத்துவக் கல்லூரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அவர் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடாதா?. அன்புமணிக்கு எதிரான வழக்கை நடத்தும் சிபிஐ அமைப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கு மோடியுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. அதனால் அன்புமணி சாட்சிகளை கலைப்பாரா? இல்லையா?. அந்த வல்லமை அவருக்கு உள்ளதா, இல்லையா?. இதனால் செந்தில்பாலாஜி மீதான விமர்சனம், அன்புமணிக்கும் தான் பொருந்தும்.

அன்புமணிக்கு எதிராக சிபிஐ வழக்கு உள்ள நிலையில் அவரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஆக்கியது ஏன்?. கூட்டணி முலம் கிடைத்த ஒற்றை மாநிலங்களவை இடத்தையும் அன்புமணிக்கே, மருத்துவர் ராமதாஸ் வழங்கினார். மக்களவை தேர்தலில் சில இடங்களில் பாமக வெற்றி பெற்றிருந்தால் அன்புமணி மத்திய அமைச்சர் ஆகி இருப்பார். அப்போது அன்புமணிக்கு எதிராக வழக்கு உள்ளதால், அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டாம் என ராமதாஸ் கூறியிருப்பாரா?. செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பும் ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உங்கள் மகனுக்குத்தான் வழங்குவீர்களா? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினால் என்ன செய்வார். செந்தில் பாலாஜி வழக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ அமைப்பு தான் நடத்தி வருகிறது. ஏற்கனவே திமுகவுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் ரெய்டுகளில் ஈடுபட்டு வரும் பாஜக, செந்தில் பாலாஜிக்கு எதிரான  வழக்கில் அவர் சாட்சியை கலைக்க முயன்றால் சும்மா விடுமா?. இதனால் வழக்கு விசாரணையை வெளி மாநிலத்திற்கு மாற்ற கோருவது அரசியலுக்காகவே.

திமுகவில் செந்தில் பாலாஜி ஒரு செயல்திறன் மிக்க தலைவராக திகழ்கிறார். அவர் வந்த உடன் அணி திறள்கிறது. கொங்கு மண்டலத்தில் பீனிக்ஸ் பறவை போல  மீண்டெழுந்து வந்துஅதே கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். வட மாவட்டங்களை நம்பியே ராமதாசின் அரசியல் உள்ளது. இன்று மழை பாதிப்பின்போது செந்தில் பாலாஜி விழுப்புரத்தில் உள்ளார். பாமகவின் கோட்டையான விழுப்புரத்தில் களத்தில் நின்று கொண்டுள்ளார். செந்தில் பாலாஜி களத்தில் இறங்கி வேலை பார்த்தால் என்ன நடக்கும் என்பது ராமதாசுக்கு தெரியும். கொங்கு மண்டலத்தில் பாஜகவை படுதோல்வி அடைய செய்த செந்தில்பாலாஜி விழுப்புரத்தில் வந்தால் என்ன ஆகும் என்று ராமதாசுக்கு பதற்றம் வந்துவிட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கொண்டு அறிக்கை விடுகிறார். அவரை சிறைக்கு அனுப்பிவிட்டால் களத்திற்கு வரமாட்டார் என எண்ணுகிறார்.

செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை எதிர் கொண்டு ஜாமினில் வந்துள்ளார். ஓராண்டுக்கும் மேலாக இருந்த அவருக்கு கடைசியாகத்தான் பிணை கிடைத்தது. அமலாக்கத்துறையால் குற்றசாட்டை நிருபிக்க முடியாததால் ஜாமின் கிடைத்து. சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியபோது, ஆளுநர் அவரை பொறுப்பில் இருந்து நீக்கினார். பின்னர் ஓரு மணி நேரத்தில் உத்தரவை திரும்ப பெற்றார்.  காரணம் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர அனுமதி இல்லை என்று சொல்ல நீதிபதி உள்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. செந்தில்பாலாஜி வழக்கை எதிர்கொண்டு வருகிறார். திமுகவுக்கு பலமாக உள்ளார் என்பதால் ராமதாஸ் அவருக்கு எதிராக இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் பாதித்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக களத்திற்கு சென்றார். துணை முதலமைச்சர் மாவட்டம் மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். எச்சரிக்கை விடப்பட்ட உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நிவாரண முகாம்களில் ஆய்வு மேற்கொண்டு மாவட்டத்திற்கு என்ன தேவை என முதலமைச்சரிடம் தெரிவித்தார். வெள்ளத்திற்கு பின்னரும் தெரிவித்தார். மழை வெள்ளத்தின்போதும் அமைச்சர் பொன்முடி களத்தில் உள்ளார்.  பாதிப்புகளை அறிவதற்காக ஒவ்வொரு  கிராமமாக செல்வது தவறா?. சேறு அடிக்கிறார்கள் என்றால் அது பாமகவினராக இருக்கக்கூடாதா? அன்புமணி தூண்டுதலின் பேரில் இது நடைபெற்றிருக்காதா?.

யுனைட்டரி ஸ்டேட், ஃபெடரல் ஸ்டேட் என்றால் என்ன? - அமைச்சர் பொன்முடி எடுத்த பாடம்

மக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் 4 பேர் புகுந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் அல்லவா?. வடமாவட்டங்களில் திருமாவளவன் சென்ற கார்கள் பல இடங்களில் கல்வீச்சுக்கு உள்ளாகியுள்ளது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். 2015 சென்னை பெருவெள்ளத்தின்போது எதிர்க்கட்சிகள் தான் களத்தில் நின்றனர். ஆனால் இன்று அரசுதான் களத்தில் உள்ளது. பாமக திமுக கூட்டணியில் இடம்பெற முயற்சித்து தோல்வி அடைந்த வேதனையில், பாஜகவுடன் சேர வேண்டிய விரக்தியில் முதலமைச்சர், செந்தில்பாலாஜி, பொன்முடிக்கு எதிராக பாமக அவதூறு பரப்புகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ