காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய் திரைமறைவில் காய்களை நகர்த்து வருவதால், கூட்டணி தொடர்பான வதந்திகள் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் – தவெக கூட்டணி தொடர்பாக பரவும் வதந்திகளின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது ஆர்.எஸ்.எஸ் குரல் என்று திமுகவின் எம்.எம். அப்துல்லா விமர்சித்துள்ளார். இது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் தான். திமுக, காங்கிரசின் கருத்துக்கள் அல்ல. இவற்றை எல்லாம் திமுக எதிர்பார்த்த விஷயங்கள் தான். கடந்த இரண்டு, மூன்று பொதுத் தேர்தல்களில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின் சிறப்பாக கையாண்டார்.
இந்த முறை அதிகாரம் மீதான பார்வை பல கட்சிகளுக்கு அதிகமாகியுள்ளது. தாங்கள் அமைச்சராக கூடாதா? என்று தங்களின் நியாயமான உணர்வுகளை காங்கிரஸ் சொல்லிவிட்டது. இதை எப்படி ஸ்டாலின் சமாளிப்பார் என்று பார்க்க வேண்டும். மாணிக்கம் தாகூர் இப்படி சொல்கிறபோதே, 125 இடங்களில் போட்டியிடுகிற தகுதி காங்கிரசுக்கு உள்ளதாக கிரிஷ் சோடங்கர் சொன்னார். தொகுதி பங்கீடு உறுதியாகும் வரை காங்கிரஸ் – தவெக பேச்சுவார்த்தை தொடர்பான வதந்திகள் பரவிக் கொண்டுதான் இருக்கும்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அமித்ஷா, என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எடப்பாடியின் பெயரையே சொல்லவில்லை. ஆனால் அதிர்ச்சி அளித்திடும் விதமாக மோடி தலைமையிலான அரசு இங்கு அமைய வேண்டுமா? என்று கேட்கிறார். வடமாநிலங்களில் ஆட்சியை பிடிப்போம் என்று நம்புகிற இடத்தில் கூட டபுள் இன்ஜின் சர்கார் என்கிற வார்த்தையை தான் பயன்படுத்தினார். மோடி சர்கார் என்கிற வார்த்தையை பயன்படுத்த வில்லை. தமிழ்நாட்டில் காலூன்றவே வழியில்லாத நிலையில், மோடியின் அரசு அமைய வேண்டுமா? என கேட்பது அதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளது.
பாஜக மையக்குழு கூட்டத்தில் திமுக அணியில் இணையாத, இணைய வாய்ப்பு இல்லாத கட்சிகளை எல்லாம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். அதில் முக்கியமானது ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?, அவர்களை சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வாரா? என்கிற கேள்வி எழுகிறது. எனவே குழப்பங்கள், எதிர்பார்ப்புகள் எல்லா அணிகளிலும் உள்ளன.

காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கேட்கிற மாணிக்கம் தாகூர், கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகரில் மிகவும் சிரமப்பட்டுதான் வெற்றி பெற்றார். 2 அமைச்சர்களின் தயவு இல்லாமல் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. கடந்த 3 பொதுத்தேர்தல்களை சமாளித்த ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் சவாலாக இருக்கப் போகிறது. திமுகவில் இடம் கிடைக்காவிட்டால் நாங்கள் தவெக கூட்டணிக்கு செல்கிறோம் என்று மிரட்டுவார்கள். விஜய், தன்னுடைய தலைமையில் ஒரு அணி அமைக்க முயற்சிக்கிறார். ராகுல்காந்தியிடம் விஜய் சந்திப்புக்கான நேரம் கேட்கிற அளவுக்கு சிலர் முயற்சிக்கிறார்கள். தவெகவுக்கு கொள்கை ரீதியாக ஒத்துபோவது காஙகிரஸ் கட்சிதான்.
எப்படியாவது திமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறார்கள். அதற்காக அவர்கள் இந்த நிமிடம் வரை மெனக்கெடுகிறார்கள். திமுகவை பல்வேறு காரணங்களுக்காக பிடிக்காத மாணிக்கம் தாகூர் போன்றவர்கள், அந்த அணியில் இருக்க வேண்டாம். நமக்கு மரியாதை இல்லை என்று செல்கிறார்கள். இதே மாணிக்கம் தாகூர், 2024 மக்களவை தேர்தலின்போது சொல்லாதது ஏன்? எல்லா கட்சிகளிலும் அந்த எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டு இருக்கிறது. விஜயும், சில காய் நகர்த்தல்களை செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த வதந்திகள் நின்று கொண்டிருக்கிறது.

150 தொகுதிகளுக்கு மேல் எடப்பாடி பிரச்சராம் செய்துவிட்டார். தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்று சொல்கிறார். இந்த நேரத்தில் அமித்ஷா அவருடைய பெயரை கூட சொல்ல மறுக்கிறார். இதன் அர்த்தம் என்ன? அமித்ஷாவின் மௌனம். அவர் பயன்படுத்துகிற சில வார்த்தைகள் கவனிக்க வேண்டியது என்று நான் தொடர்ந்து செல்கிறேன். அது புதுக்கோட்டையிலும் தொடர்கிறது. எதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ ஆட்சி அமைப்போம் என்று சொல்ல மறுக்கிறார். மோடியின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டுமா? என்றால் அவர் மனசுக்குள் என்ன வைத்திருக்கிறார்?
ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜகவினரை கொண்டு வந்து முதலமைச்சராக அமர வைக்கிற திட்டம் வைத்துள்ளாரா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள், நிதி ஒதுக்குவதிலும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறார்கள். தன் சொந்த கூட்டணியையே கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தவெக கூட்டணிக்கு வர வேண்டும் என்று செங்கோட்டையன் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அமமுகவின் நலன், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டணி முடிவை எடுப்போம் என்று தினகரன் கூறியுள்ளார். அதேபோல் தான் விஜயும் காங்கிரசை கூட்டணிக்கு வர முயற்சித்து வருகிறார். ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களை தூண்டிவிட்டு இதுபோன்ற ஒரு தியரியை கொண்டுபோய் வையுங்கள் என்று சொல்லியுள்ளார். யார் சொல்லி அவர் ட்வீட் போட்டார் என்று உள்ளது. தினகரனை பொறுத்தவரை இரண்டு, மூன்று வாய்ப்புகள் உள்ளன.பிரேமலதா ஜனவரி 9ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று சொல்லியுள்ளார். அவருக்கும் இரு வாய்ப்புகள் உள்ளன. விஜய், காங்கிரசுக்கு தான் மிகவும் சிரமப்படுவார். தினரகன், ஓபிஎஸ் போன்றவர்கள் மிக இயல்பான கூட்டணியாக உள்ளது. ஓபிஎஸ் தனித்து கட்சியாக களமிறங்குவது சின்னம் பெறுவதற்காக மட்டும்தானே தவிர, அந்த இயக்கத்தை வளர்த்தெடுக்கும் எண்ணம் அவருக்கு கிடையாது.


