பிச்சைமுத்து சுதாகர்
மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் கூறிய கருத்து, பரவலாக கண்டனத்தைப் பெற்று வருகிற சூழலில் எனது கருத்தை நான் பகிர விரும்புகிறேன்.
நான் எனது பதிவுகளைப் பெரும்பாலும் மொபைல் வழியாகவோ அல்லது கம்ப்யூட்டர் வழியாகவோ தட்டச்சு செய்துதான் பதிவேற்றுவேன். ஆனால் இந்தப் பதிவை முழுக்க முழுக்க குரல் பதிவு (voice type writing) வாயிலாகத் தயார் செய்துள்ளேன். குறிப்பாக கூகுள் கீபோர்டு வாயிலாக நான் தமிழில் பேசி எனது அலைபேசி அவற்றை எழுத்தாக உடனுக்குடன் மாற்றித் தந்துள்ளது.
நான் ஏன் இதை இப்பொழுது குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால் தற்சமயம் செயற்கை நுண்ணறிவு” நுட்பம் மிகப் பரவலாக பயன்பட்டு வரும் சூழலில் எந்த ஒரு மொழியையும் நமக்குத் தேவையான ஒரு மொழிக்கு எளிதாக ட்ரான்ஸ்லேட்டர் வசதி மூலம் மாற்ற இயலும். அதாவது, நாம் விரும்புகிற ஒரு மொழியில் பேசி, அதனை ஆங்கிலத்திற்கு அல்லது வேறு எந்த ஒரு மொழிக்கோ எளிதாக எழுத்து வடிவில் மாற்ற முடியும்.
மேலும் ஆட்டோ ட்ரான்ஸ்லேட் நுட்பம் மூலம் நாம் எதிரில் இருப்பவர் பேசப் பேச நாம் எந்த மொழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த மொழியில் அது மொழிமாற்றம் செய்துதரும் வசதியும் தற்போது வந்துவிட்டது. ஆகையால் இனிவரும் எதிர்காலத்தில் நம்மால் பல மொழிகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக மொழிமாற்றம் வழியாக எழுதவும் பேசவும் முடியும்.
பள்ளிப் பருவத்தில் நாம் மிக முக்கியமாக மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டியது அறிவியல் கணிதம், நிதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் பின்னாளில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு பணிக்குச் செல்லும் பொழுது அவர்களுக்கு பணி நிமித்தம் தேவைப்படும் ஒரு மொழியை மிக எளிதாக அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். மொழி குறித்த அறிவை வருப்பறைக்கு வெளியே உள்ள சமூகம் எளிதாகக் கற்றுத்தரும். ஆனால் நுட்பங்கள் சார்ந்த அறிவை அவர்களால் வகுப்பறையிலோ அல்லது சிறப்பு பயிற்சியின் வாயிலாக மட்டுமே பெற இயலும்.
ஆகவே தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்கள் தாய்மொழியோடு ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டால் போதுமானது. தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நுட்பவியலில் மிக முன்னேறிய நாடுகள்கூட தற்போது தங்கள் தாய் மொழி வாயிலான கல்வியோடு ஆங்கிலம் கற்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பாக பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பிரிட்டனுக்கு ஆங்கிலம் கற்க கோடைகால விடுமுறைகளில் அதிகமாக வருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை பயிலலாம். மாநில எல்லையோரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்கள் அவர்களின் தாய்மொழியில் பயில்வதற்கான வசதியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
உதாரணத்திற்கு கேரளப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் மலையாளத்தை முதல் மொழியாக எடுத்துப் பயில முடியும். அதே போல ஆந்திராவை ஒட்டி உள்ள பகுதிகளில் பயிலும் பள்ளி மாணவர்கள் தெலுங்கை முதல் மொழியாக எடுத்துப் பயில முடியும். ஆகவே பிற மொழிகளில் கற்க வேண்டும் என்கின்ற சிந்தனைக்கு தமிழ்நாடு ஒருபோதும் எதிரி கிடையாது. அதே நேரம் மாணவர்களுக்கு மூன்று மொழி பயில்வது என்பது மிகப்பெரிய சுமையாகவும் இருக்கக் கூடாது என்பதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெளிவாக உள்ளது. நாம் தொடர்ச்சியாக எதிர்த்து வருவது இந்தித் திணிப்பையே.
இரு மொழிக் கொள்கை வாயிலாக இன்றைக்கு தமிழ்நாடு மிக உயர்ந்த மனிதவள மேம்பாட்டில் உச்சத்தைத் தொட்டு இந்தியாவின் ஜிடிபி பங்களிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டின் இரு மொழிக்கொள்கை என்பதை, வட இந்தியாவில் உள்ளவர்கள் பாசிட்டிவாக பார்க்க வேண்டும். இந்தியா மென்மேலும் வளர வேண்டும் என்று உண்மையிலேயே கருதினால் அவை செய்ய வேண்டியது அறிவியல் நுட்பம் மற்றும் இதர மிக முக்கியமான பாடப்பிரிவுகளை எவ்வாறு எளிதாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் உத்திகளை மேம்படுத்தலாம் என்பதே.
அதை விட்டுவிட்டு இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது அதற்கு கேடாகத்தான் முடியும். நான் மேலே சொன்னபடி இந்தப் பதிவு முழுவதையும் டிரான்ஸ்லேட்டர் வசதியுடன் வாய்ஸ் டைப் மெசேஜ் வழியாகத் தட்டச்சு செய்துள்ளேன். இந்தப் பதிவை இந்தி மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஒரு செகண்டில் மாற்ற இயலும், அந்த அளவிற்கு நுட்ப வசதி வந்துவிட்டது. ஆகவே குழந்தைகள் மீது பல மொழிகளைக் கற்க வேண்டும் என்கின்ற திணிப்பை விட்டுவிட்டு, அவர்களை மிகச் சிறந்த சிந்தனைவாதிகளாக, நுட்பங்களில் சிறந்தவர்களாக, பகுத்தறிவு உள்ளவர்களாக மாற்றுவதே ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும்.