பாஜக உடன் மதிமுக கூட்டணிக்கு செல்வதாக செய்திகள் வெளியாகிய நிலையில், மதிமுக பொதுக்குழுவில் அரங்கேறிய நிகழ்வுகள் அதை உறுதிபடுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன என திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

மதிமுக நிர்வாகிகள், திமுகவில் இணைந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி குறித்தும், மதிமுகவின் கூட்டணி கணக்குகள் குறித்தும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அண்மையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக மதிமுகவின் முகங்களாக கருதப்படுகிற நபர்கள் சமூக வலைதளங்களிலும், மேடைகளிலும் தங்களுக்கு 12 இடங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். கடந்த இரண்டரை மாதங்களாக மதிமுகவில் இந்த குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் அனைத்து கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் தோல்வியும், தலா 4 இடங்களில் வெற்றியும் பெற்றன.
தற்போதைய சூழலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்கள் கேட்டாலே கொடுக்க முடியாத சூழல் உள்ளது. ஏனென்றால் புதிய கட்சிகள் கூட்டணியில் வந்து இணைகின்றன. எஸ்டிபிஐ கட்சி இணைந்துள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கடந்த முறையே வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். தேமுதிக கிட்டத்தட்ட 70 சதவீதம் கூட்டணி உறுதி செய்யப் பட்டதாக தகவல். அப்படி உறுதி செய்யப்படவில்லை என்றால்? எடப்பாடி பழனிசாமி ஒரு ராஜ்யசபா இடம் தருகிறபோதே பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் கூட்டணியை உறுதி செய்யவில்லை. இதன் மூலம் திமுகவுக்கான கூட்டணி கதவுகளை பிரேமலதா திறந்து வைத்துள்ளார்.
திருமாவளவன், பாமக வந்தால் அந்த கூட்டணிக்கு நான் செல்ல மாட்டேன் என்று சொல்கிறார். ஆனால் ராமதாசின் நகர்வுகள் எல்லாம் திமுகவை நோக்கி தான் உள்ளன. எனவே திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து, திமுக சின்னங்களில் போட்டியிடக்கூடிய கட்சிகள் உள்ளன. கொ.ம.தே.க கூட்டணியில் உள்ள நிலையில் தற்போது தனியரசு வருகிறார். மூவேந்தர் முன்னேற்றக்கழகம் கூட்டணியில் இருக்கும் சூழலில், கருணாஸ் வந்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இருக்கிறார். இவர்களை போன்ற கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்சிகளாக உள்ளனர். திமுக குறைந்தபட்சம் 160 இடங்களில் போட்டியிட்டாக வேண்டும். அதற்கும் குறைவான இடங்களில் திமுக போட்டியிட முடியாது. எனவே இதை அனுசரித்து தான் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை தருவார்கள். விசிக, பொது உடைமை இயக்கங்கள் ஒரு டிமாண்டை உருவாக்கியுள்ளனர். மதிமுக இதுவரை எந்த டிமாண்டும் உருவாக்கவில்லை. அதற்கு காரணம் கட்சிக்குள்ளேயே நிறைய சலசலப்புகள் இருந்தன. மற்றொருபுறம் வைகோ, திமுக கூட்டணிக்கு எந்த நெருக்கடியும் தரக்கூடாது என்று உறுதியுடன் இருந்தார். அதைதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மதித்து நடந்தார்.
மக்கள் நலக்கூட்டணி நிறைவு பெற்றவுடன், மதிமுகவில் இருந்து வந்தவர்கள் ஒருவரை கூட திமுகவில் அதிகாரப்பூர்வமாக சேர்த்துக்கொள்ளவில்லை. பல பேர் முயற்சித்தனர். முதலமைச்சர் அவர்களுக்கு சொன்ன விஷயம், நீங்கள் தற்போதைக்கு கட்சியில் இணைய வேண்டாம். அண்ணன் வைகோ வருத்தப்படக் கூடாது. இந்த கூட்டணிக்குள் சலசலப்பு வரக்கூடாது என்று தான் சொன்னார். ஏறத்தாழ 66 பேர் திமுகவில் சேர பட்டியல் தரப்பபட்டது. இந்த பட்டியலில் மதிமுகவின் தற்போதைய மாவட்ட செயலாளர்களும் உள்ளனர். ஆனால் முதலமைச்சர் அதை ஏற்கவில்லை. தற்போது மதிமுக பொதுக்குழு தீர்மானத்தின் மூலமாக ஒரு டிமாண்டை ஏற்படுத்துகிறது. இவ்வளவு நாளாக மதிமுகவினரை சேர்க்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்லடம் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துரத்தினத்தை சேர்த்துக்கொள்கிறார். அப்போது, ஏதோ ஒரு பிரச்சினை உள்ளது என்பது புரிகிறது. ஊடகங்களில் ஒரு செய்தி வருகிறது. ஒரு மத்திய அமைச்சர் பொறுப்பு, 15 தொகுதிகள், செலவுக்கு பணம் போன்றவை எல்லாம் பாஜகவுடன் பேசப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் மதிமுக இணைகிறது என்று செய்தி வருகிறது. இந்த செய்தி வெளியாகிறபோதே மதிமுக பொதுக்குழுவில் 12 இடங்கள் கேட்போம் என்று தீர்மானம் போடுகிறார்கள்.
இவற்றை எல்லாம் தாண்டி முதலமைச்சரை கோபம் கொள்ள செய்தது, பொதுக்குழுவில் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், திமுகவை கடுமையாக அட்டாக் செய்து பேசுகிறார். பொதுக்குழுவின் நிறைவு உரையில் பேசிய வைகோ, அர்ஜுன ராஜ் பேசிய எதையும் நான் ஏற்கவில்லை. அவர் பேசியது அவருடைய சொந்த கருத்து என்று சொல்கிற நிலைமை ஏற்பட்டது. இன்னும் கடுமையாக பேசுகிறபோது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் எழுந்து, அர்ஜுனராஜ் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளார். அப்போது மதிமுக தரப்பில் ஏதோ ஒரு முயற்சியை, வேறு ஒரு பக்கம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இந்த விமர்சனம். நாடாளுமன்றத் தேர்தலின்போது உங்களுக்கு வேறு கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. நீங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக இருந்தீர்கள். தற்போது நீங்கள் மறுத்தாலும் ஊடகங்களில் வரும் செய்திகள் எதை உணர்த்துகிறது. ஏதோ ஒரு வகையில் பேச்சுவார்த்தைகள் நடக்கிறது என்று. அதற்கு மதிமுகவிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல பொதுக்குழு நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. அவைத்தலைவர் விமர்சிக்கிறார். கூடுதல் தொகுதிகள் கேட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள்.
மதிமுகவின் அங்கீகாரம், சின்னம் போன்றவை போய்விட்டது. கட்சியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கு வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கு 12 இடங்களில் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும். அவர்களின் கணக்கு அதுதான். 2021 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிட்ட 6 இடங்களும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட இடங்களாகும். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் திமுக எம்எல்ஏக்கள் என்கிற கணக்குதான். புதூர் பூமிநாதன், அரியலூர் சின்னப்பா போன்றவர்கள் மதிமுகவில் பொறுப்புகளில் இருந்து விலகி, தங்களின் உறவினர்களை அவர்களது பொறுப்பில் அமர்த்திவிட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர்களை திமுக சின்னத்தில் போட்டியிட வைக்கத்தான் திமுக விரும்பும். மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் முடிவுக்கு வருகிறது. அதை திமுக ஏற்காது. கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 இடங்களில் 4ல்தான் மதிமுக வென்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் 4-5 தொகுதிகள் திமுக கூட்டணியில் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதை தாண்டி இடங்கள் தர வாய்ப்பு கிடையாது.
5 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் அங்கீகாரத்தை பெற முடியாது. மற்றொன்று சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவது அவர்களது கணக்கு கிடையாது. கட்சியை தக்கவைக்க அதிகாரம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. எம்பி என்கிற அதிகாரம் துரை வைகோவுக்கு போதுமானதாக இல்லை. மத்திய அமைச்சராக பொறுப்பு தருகிறது பாஜக. 12-13 தொகுதிகளை தருகிறது. அதிமுக கூட்டணி. தனிச்சின்னத்தில் போட்டியிடலாம். எனவே என்ன தவறு என்கிற சிந்தனைக்கு மதிமுக மெல்ல நகர்கிறார்களோ என்கிற ஐய்யப்பாடு முதலமைச்சர் பக்கத்தில் இருந்தே வந்துள்ளது. இல்லாவிட்டால் முதலமைச்சர், தற்போது மதிமுக முன்னாள் நிர்வாகியை திமுகவில் சேர்த்திருக்க மாட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.