2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டால், அவருடைய கட்சியினால் டெபாசிட் கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


விஜய் கூட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- த.வெ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பாஜகவினுடைய அழுத்தத்தை தாண்டியும் அவர் தனித்து போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி தனித்து போட்டியிட்டால் விஜய் டெப்பாசிட்டை இழப்பார். 16.5 சதவீதம் வாக்குகளை பெற்றால் தான் டெபாசிட் வாங்கிட முடியும். அதற்கு 20 சதவீதம் வாக்குகளை வைத்திருக்க வேண்டும்.
இன்றைய சூழலில் 20 சதவீதம் வாக்குகள் திமுக, அதிமுகவிடம் மட்டுமே உள்ளது. விஜய்க்கு அதிகபட்சம் 10 முதல் 12 சதவீதம் வாக்குகள் இருக்கலாம். அதை வைத்து என்ன செய்ய முடியும்? தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் சினிமா பாணியில் ஆவேசமாக பேசினார். வாக்கு அரசியலில் 5 முதல் 8 சதவீதம் வித்தியாசம் இருந்தால், 234 தொகுதிகளிலும் தோல்வி ஏற்பட்டு விடும். இது வாக்கு அரசியலின் எதார்த்த கணக்கு ஆகும். இதை புரிந்துகொள்ள பல தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும்.

தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் அதிமுகவை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். அதற்கு அதிமுக தரப்பிலும் எதிர்வினை ஆற்றப்பட்டுள்ளது. விஜயின் அதிமுக எதிர்ப்புக்கு காரணம் அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்தால் தான் வாக்கு கிடைக்கும் என்ற முடிவுக்கு அவர் சென்றுவிட்டார். திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு எதிரான கூட்டணியில் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் சீமானை போன்று தனித்துப் போட்டியிடலாம். விஜய் மற்றும் அதிமுக தரப்பில் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடைபெற்றன. இன்றைக்கு பழம் புளிக்கும் கதைக்கு போய்விட்டது. சினிமா வேறு, அரசியல் வேறு. அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எதற்காக விஜய்க்கு வாக்களிக்க வேண்டும்?
எனக்கு அதிமுக, திமுகவுக்கு வாக்களிக்க பிடிக்காவிட்டால் சீமானுக்கு வாக்களிக்கலாம் அல்லவா?. விஜயின் கொள்கை திராவிடம், தமிழ்தேசியம் என்று சொல்கிறார். அதற்கு தான் நாங்கள் திமுக, அதிமுக என்று 2 கட்சிகள் வைத்திருக்கிறோமே. தமிழ்தேசியமும் அதில் உள்ளது. ஆனால் சாய்ஸ் கிடையாது. அதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

விஜய் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்கிறார். ஊழல் என்பது மக்களிடம் இருந்து தான் தொடங்குகிறது. முதலில் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். முதல்வன் பட பாணியில் உடனடியாக மாற்ற முடியாது. எல்லாவற்றையும் படிப்படியாக மாற்றுவதாக விஜய் கூறுகிறார். யார் தான் அப்படி சொல்லவில்லை? என்றைக்கு படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு கூடுதல் கட்டணம் வாங்குகிறார்களோ, அன்றைக்கே சினிமாவும் ஊழல் ஆகிறது. அப்போது நீங்கள் எல்லாம் ஊழல் பற்றி பேசக்கூடாது. அது தவறாகும். அதுபோக விஜய் இந்த முகத்தை பார்த்தால் ஊழல் செய்வது போன்று தெரிகிறதா? என்று கேட்கிறார். ஏன் எங்களுக்கு அப்படி தெரிகிறதே. அப்பாவியாக முகத்தை வைத்தால், யாரும் ஊழல் செய்ய மாட்டார்களா? என்ன விதமான ஒப்பீடு இது.
40 சதவீதம் வாக்குகள் உள்ளதாக சொன்னீர்கள். தற்போது தனித்துப் போட்டியிடுவதாக சொல்கிறீர்கள். அரசியலில் ஏது நட்பு சக்தி? அரசியலில் ஒரே சக்தி, ஜெயிக்கிற சக்தி மட்டும்தான். சக்தி இருக்கவன் கூட வா, வெற்றி பெறலாம். கூட்டணி ஏற்பாடு என்பது தான் அப்படிதான். விஜயுடன் டிடிவி தினகரன், தேமுதிக போன்றவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினகரன் என்டிஏ கூட்டணியில் சேர்ந்துள்ளார். அப்போது தினகரனுக்கே விஜய் முதலமைச்சர் ஆவார் என்கிற நம்பிக்கை இல்லை.

திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ளது. கீழ்மட்டத்தில் கட்சி கட்டமைப்புகள் உள்ளன. டிடிவி போன்றவர்கள் சிறிய கட்சிகள் தான். அவர்களுக்கே விஜய் முதலமைச்சர் ஆவார் என்கிற நம்பிக்கை வரவில்லையே? அதன் காரணமாக அவர் என்டிஏ கூட்டணிக்கு சென்றார். ஒரு முன்னாள் முதலமைச்சரான ஓபிஎஸ் எப்படி விஜயிடம் கூட்டணிக்கு வருவார்? விஜய் தானே அவரை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் விஜய் சினிமா நட்சத்திரம் பாணியிலேயே உட்கார்ந்து இருக்கிறார்.
ஜனநாயகன் படத்திற்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது என்று விஜய் சொல்லி இருந்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைத்திருக்கும். ஆனால் அமித்ஷாவிடம் இருந்து எதிர்வினை வரும் என்பதால் அவர் அச்சப்படுகிறார். மத்திய அரசை விஜயால் ஒருபோதும் எதிர்க்க முடியாது. கூட்டணிக்கு விஜய் தான் மற்றவர்களை தேடிச் செல்ல வேண்டும். அவர்கள் தேடி வர மாட்டார்கள். விஜயின் பிரச்சினை என்பது அவருக்கு அவரை பற்றிய மிகையான மதிப்பீடு உள்ளது. பெரிய நடிகரான நாம் கேட்டால் எல்லோரும் வாக்களித்து விடுவார்கள் என்று நினைக்கிறார். இதன் மூலம் அவர் தவறு செய்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


