விஜய் பங்கேற்கும் ஆதவ் அர்ஜுனா நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அவர் அளித்துள்ளார்.

வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் அமைப்பின் நிறுவனரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் உள்ளவர் ஆதவ் அர்ஜூனா. இவர் அம்பேத்கர் வரலாறு குறித்து ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூலினை தொகுத்துள்ளார். இதனை விகடன் பிரசுரம் சென்னையில் வரும் 6ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த நூல் வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்கவிருந்தார். இவ்விழாவில் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க தேதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியீட்டு தேதி தள்ளிப்போனதால், முதலமைச்சர் பங்கேற்கவில்லை. இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நூலை வெளியிட, திருமாவளவன் பெற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
திமுகவை கடுமையாக எதிர்க்கும் விஜயுடன் ஒரே மேடையில் திருமாவளவன் பங்கேற்பது கூட்டணியில் பிரச்சினையை ஏற்படுத்தும் என கருத்துக்கள் எழுந்தன. எனினும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த கூட்டத்தில் திருமா பங்கேற்கவிருப்பதாக அறிவித்திருந்தார். முன்னதாக திருமாவின் சமூக வலைதள பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த அவரது பழைய பேச்சு தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் விசிக – திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், திருமாவளவன் தான் திமுக கூட்டணியில் தொடர்வதாக விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் தான், ஆதவ் அர்ஜுனாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என திருமாவளவன் முடிவெடுத்துள்ளார். கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இதனை அவர் அறிவித்துள்ளார். இதனால் ஆதவ் அர்ஜுனாவின் நூலை நடிகர் விஜய் வெளியிட, முன்னாள் நீதிபதி சந்துரு அதனை பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமாவளவன் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்காமல் போனதற்கு திமுகவின் அழுத்தமே காரணம் என்றும், திருமாவை மிரட்டி பணி வைக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் பரப்பப்படுகிறது. விஜய், திமுகவை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். திருமாவளவின் கொள்கை நிலைப்பாடு, அரசியல் நிலைப்பாடு ஆகியவை திமுகவிற்கு நன்றாகவே தெரியும். இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் ஒருவரான தான், அந்த கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டேன் என திருமா திட்டவட்டமாக கூறியிருந்தார்.
எனவே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதால் தொண்டர்களின் மத்தியில் தவறான எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க, கூட்டத்தில் பங்கேற்கமால் இருக்க திமுக அறிவுறுத்தி இருக்கலாம். கூட்டத்தில் தான் பங்கேற்பேன் என திருமா அறிவித்திருந்த நிலையில், தற்போது மாற்றம் ஏற்பட அவரது சுயமான முடிவு மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஏனெனில் தனது வாழ்நாளில் பல்வேறு போராட்டங்களை பார்த்தவர் அவர்.
அம்பேத்கர் என்ற பெயர் நாடு முழுவதும் உள்ள தலித் மக்களின் அடையாளமாக திகழும் நிலையில், அம்பேத்கரை பற்றி பேசினால் தலித்துகளின் வாக்குகள் கிடைத்து விடும் என பாஜக எண்ணுகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்பேத்கரை கொண்டாடும் தலைவர்களை கையில் எடுத்தால், அவர்களது வாக்குகளையும் கைப்பற்றி விடலாம் என எண்ணுகின்றனர். நடிகர் விஜய் வரவு பாஜக-வுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சினிமா பிரபலம் மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்க என்பதால் விஜய் மூலம் தலித் சமுகத்தினரின் வாக்குகளை எளிதில் கைப்பற்றிவிடலாம் என பாஜக எண்ணுகிறது. ஆதவ் அர்ஜுனா நேர்மையானவராக இருப்பின் திருமா பங்கேற்க மாட்டேன் என அறிவித்த உடன் அவர் புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் வேறு நபர்களை வைத்து வெளியீட்டு விழாவை நடத்தும்போதே அவரது நிலைப்பாடு புரியவருகிறது. விசிகவை விஜயிடம் அடகு வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஆதவ் அர்ஜுன் செயல்படுவதாகவே தெரிகிறது.
திமுக, விசிக கூட்டணி பொருந்தும் கூட்டணி, கொள்கை அளவில் ஒரே சிந்தனை கொண்ட கட்சிகள், திமுக 2 இடங்கள் கொடுத்தாலும் அந்த இடங்களில் விசிக நிச்சயமாக வெற்றி பெற முடியும். ஆனால் விசிகவின் பலத்திற்கு 2 எம்.பி. இடங்கள் மிகவும் குறைவு, 4 எம்எல்ஏ சீட்டுகள் தான் தருவார்கள் என திருமாவளவனை உளவியல் ரீதியாக தாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, தங்களது பலம் பலவீனம் நன்றாகவே தெரியும். அதனால் தான் எடப்பாடி பழனிசாமி அழைத்தபோதும், திருமாவளவன் செல்லவில்லை. தமிழ்நாட்டில் திராவிட கருத்தியலை அழிக்க முடியாத வகையில் திருமாவளவன் அரணாக திகழ்ந்து வருகிறார். அந்த அரணை தகர்க்க திருமாவளவனை பலவீனப்படுத்த, அவரது கட்சியின் பலம், பலவீனம் என கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
இந்த நிலையில்தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக பலவீனமாக உள்ளதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஒப்பீட்டளவில் பார்த்தால் 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவின் வாக்கு சதவீதம் ஒரே அளவில் தொடவர்து தெரியவரும். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 24 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 1.4 கோடி வாக்குகளை பெற்றிருந்தது. அதே வேளையில், 2024 மக்களவை தேர்தலில் 22 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு 1.16 கோடி வாக்குகளை பெற்றிருந்தது. 2 இடங்கள் குறைவாக போட்டியிட்ட நிலையில், பெற்ற வாக்கு சதவீதத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பது தெரியும். கலைஞருக்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என பலமான போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு பெரிய அளவில் போட்டியே இல்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலேயே, உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. மிகவும் வலிமை வாய்ந்த கூட்டணியில் விசிக பயணிப்பதை பாஜக விரும்பவில்லை. எனவே திமுக கூட்டணியில் இருந்து திருமாவை வெளியேற்ற முயற்சிக்கின்றனர்.
ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற தேரை நகர்த்தி செல்ல திருமாவளவன் போன்ற சமுகநீதி போராளி தான் வேண்டும். அனைத்து சூழல்களிலும் இந்தியா கூட்டணிக்கு திருமா அவசியம். சமுக நீதிதான் அவரது இயல்பு. தனது இயல்பின் படியே யாருடன் செல்ல வேண்டும் என திருமா தீர்மானித்துவிட்டார். இதனை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதே வேளையில், திமுகவை விமர்சிக்கும் ஆதவ் அர்ஜுனா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எதிர்க்கட்சிகளும் அதையே தான் எதிர்பார்க்கின்றனர்.
ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து திருமாவை நீக்க செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். அதன் முலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தலாம் என முயற்சிக்கின்றனர். அதனால் திருமாவளவன் அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்க விரும்பவில்லை. மேலும், புத்தக வெளியீட்டு விழாவுடன் இந்த விவகாரம் முடிந்து விட்டால் பிரச்சினை இல்லை என்றும் திருமாவளவன் எண்ணுகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை என முடிவு செய்ததன் மூலம் திருமாவளவன் சரியான முடிவை எடுத்துள்ளார். இது திமுக கூட்டணி உடையும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தான் பலத்த அடியாகும்.