மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகம் அரசியல் ரீதியாக இன்னும் பக்குவப்படாததால் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கூட்டணி ஆட்சியின் சாதக, பாதகங்கள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- இந்தியா டுடே வட்டமேசை நிகழ்வில் தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்து விட்டார். நானும் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்றே கருதுகிறேன். காரணம் அதிமுக கூட்டணியில், அதிமுக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதில் நம்பிக்கை உள்ள திராவிட கட்சிதான். ஆனால் அதற்கு மாறாக பாஜக சதுர்வர்ண கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். இனம் வழியாக, மொழி வழியாக, மத வழியாக பாஜக மக்களை பிரிக்கிறது. இப்படி இரு வேறு கொள்கைகளை கொண்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், யார் பேச்சை யார் கேட்பார்கள்?
திமுக கூட்டணியிலும் வெவ்வேறு கட்சிகள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு கொள்கை அளவில் வேறுபாடு கிடையாது. அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். மதச்சார்பற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் சொல்கிறார்கள். எந்த செயலை, எவ்வளவு வேகமாக நடத்த வேண்டும் என்பதில்தான் இக்கட்சிகளுக்குள் மாறுபாடு வருகிறது.

மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. 1977ல் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது தனிப் பெரும்பான்மையோடு இருந்த போதும், கூட்டணி கட்சிகளான ஆர்.எஸ்.பி. மற்றும் பார்வர்டு பிளாக் கட்சிகளுக்கு முக்கிய இலகாக்களை வழங்கினார்கள். அதற்கு காரணம் ஒரு காரியத்தை எந்த அளவுக்கு வேகமாக கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் இந்த கட்சிகளுக்குள் மாறுபாடு இருந்தது. கொள்கை அளவில் மட்டும் அல்ல. கொள்கையை எந்த அளவு வேகத்தில் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதிலும் இவர்களுக்கு மாறுபாடு இல்லை.
அதேவேளையில், தமிழ்நாட்டில் திமுக முடிந்த மட்டும் யாரையும் விடுபட்டு விடமால் எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆணவக்கொலை விவகாரத்தில் விசிக தீவிரமாக காட்டுவார்கள். இந்த விவகாரம் தொடர்பான தங்களின் கோரிக்கைகளை திமுக கேட்பதாகவும், வேகம் சற்று குறைவாக இருந்தபோதும், தாங்கள் சொல்வதை மறுப்பதில்லை என்று சொல்வார்கள். அதேநேரம் விசிகவை சேர்ந்த ஒருவர் அமைச்சராகினால், அந்த கட்சியினரே வேகமாக போக வேண்டியது தானே என்று கேட்பார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலச்சீர் திருத்தத்தில் மிகவும் தீவிரமானவர்கள். திமுகவும் நிறைய நிலங்களுக்கு பட்டா வழங்கியுள்ளனர். விவசாய நிலங்களில் இன்னும் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்ய முடியும். சில அறக்கட்டளை நிலங்களை அரசு கையகப்படுத்த முடியும். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் ஆகினால், அவர்கள் உடனடியாக நிலச்சீர்திருத்தங்களை வேகமாக மேற்கொள்வார்கள். அப்படி செய்கிறபோது, அது திமுக அரசின் செயல்பாடுகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த சிரமங்களை கூட்டணி கட்சிகளும் உணர்ந்துள்ளன. இந்த சிரமங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது சிக்கலில் வந்து முடியும். இதன் காரணமாகவே முதலமைச்சர் கூட்டணி ஆட்சி வேண்டாம் என்று மிகத் தெளிவாக சொல்கிறார். இதுதான் உண்மை.
ஒருங்கிணைந்த கருத்துடையவர்கள் சேர்ந்து நின்றால் பலம் பெறுவார்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ், திமுக, விசிக, இடதுசாரிகள் இணைந்துள்ளனர். அவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை வெளியில் சொல்லவும், வாக்கு கேட்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு மேற்குவங்கத்தை போன்ற அரசியல் பக்குவம் கிடையாது. எனவே கூட்டணி ஆட்சி என்பது சிரமத்தை தான் கொடுக்கும்.

காங்கிரசில் ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையை மூன்று பேர் தான் பேசி கொண்டிருக்கிறார்கள். இதை ராகுல்காந்தி ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அதேவேளையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூட்டணி தொடர்பாக யாரும் பேசக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீறி பேசுபவர்கள் மீது காங்கிரஸ் நினைத்தால் நடவடிக்கை எடுக்கும். இல்லாவிட்டால் சலசலப்புகள் வரத்தான் செய்யும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. சொல்கிறார். அப்போது திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகச் செய்ய வேண்டும் என்று மக்களிடம் சொல்கிறாரா? எனவே இவற்றை பற்றி எல்லாம் பேசாமல் தேர்தலில் ஒன்றிணைந்து உழைத்தால் அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் அவர்களுக்கு தான் பாதகம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


