அண்ணா பிறந்தநாளில் எடப்பாடியின் உரையின் மூலம் அதிமுகவை இனி ஒருங்கிணைப்பது சாத்திமில்லாதது என அமித்ஷா முடிவுக்கு வந்துவிட்டார். இனி அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ், பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- டெல்லியில் அமித்ஷாவை மூத்த நிர்வாகிகளுடன் சென்று எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். பின்னர் 20 நிமிடங்கள் தனியாக அமித்ஷா உடன் பேசியுள்ளார். பிறகு அவர் வெளியில் வருகிறபோது முகத்தை மூடியவாறு செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஒருவேளை அமித்ஷா அவரை எச்சரித்து அனுப்பினாரா? என்று தெரியவில்லை? இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது? என்கிற வெளிப்படையான அறிக்கை எதுவும் அவரிடம் இருந்து வரவில்லை. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்களை நாடிதான் அதிகாரத்தை பெற்றார்கள். டெல்லியை நாடி அதிகாரத்தை பெறவில்லை. ஆனால் தற்போது அதிமுகவினர் மக்களை நாடிச் செல்வதற்கு பதிலாக டெல்லியை நாடிச்சென்று உத்தரவுகளை பெறுவதற்காக தவம் கிடக்கிறார்கள். அண்ணா பிறந்தநாளை ஒட்டி கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று சொன்னார். எனவே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தன்னிடம் தான் பேச வேண்டும். ஓபிஎஸ் போன்றவர்களை சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் தரக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை மிரட்டி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

எடப்பாடி பழனிசாமியின் வற்புறுத்தலின் பேரில் அண்ணாமலையை கட்சியில் இருந்து நீக்கினார்கள். இன்றைக்கு அவரை வற்புறுத்தி பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். 80 கோடி சொத்தை அவர் வாங்கியதாக பாஜகவினரே குற்றம்சாட்டி உள்ளனர். அண்ணாமலை தனியாக ஒதுங்கி நிற்கக்கூடாது. அப்படி தனியாக நின்றால் ஊழல் குற்றச்சாட்டு சொல்லி அவருடைய எதிர்காலத்தை பாழ்படுத்தி விடுவோம். திருப்பி அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று நீங்கள் யோசிக்கக் கூடாது. நாங்கள் சொல்வதைதான் அண்ணாமலை கேட்க வேண்டும் என்று ஒரு நேரேட்டிவ் செட் செய்து, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அண்ணாமலை பாஜக கூட்டத்திற்கு இழுத்து வரப் பட்டுள்ளார். பி.எல்.சந்தோஷ் வீட்டிற்கே போய் அண்ணாமலையை இழுந்து வந்தார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து இனி விமர்சித்து பேசினால் 80 கோடி ஊழல் குற்றச்சாட்டு, 1000 கோடி குற்றச்சாட்டாக மாறும். எச்சரிக்கையாக இருங்கள் என்று அவருக்கு மெசேஜ் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து, அவர் பாஜகவுக்கு நன்றிக் கடனை மறக்காமல் இருக்கிறார் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய 4.5 ஆண்டு ஆட்சியை காப்பாற்றி கொடுத்து பாஜக என்று சொல்கிறார். ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களின் ஆதரவு காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை நடத்தினார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி அதிகாரம் வந்த உடன், அந்த அதிகாரத்தை கொடுத்த சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கினார். ஓபிஎஸ்-ஐ போனால் போகிறது என்று சேர்த்துக்கொண்தாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஓபிஎஸ்-ஐ அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக்கவும், நீங்கள் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கவும் ஒப்புக்கொண்டு தானே அவரை கட்சியில் சேர்த்தீர்கள். அதிகாரம் முழுவதும் உங்களிடம் இருந்ததால் ஓபிஎஸ்-ஐ டம்மி ஆக்கினீர்கள். அவரிடம் இருந்த ஆட்களை எல்லாம் உங்கள் பக்கம் இழுத்தீர்கள். அனைவரையும் ஊழல் செய்ய அனுமதித்தீர்கள். அவர்கள் எல்லாம் உங்கள் பக்கம் இருந்தனர். ஆட்சி முடிந்து தேர்தலில் அவரை பயன்படுத்தி 70 சீட்டுகளை வாங்கினீர்கள். அதன் பிறகு ஓபிஎஸ்-ஐ கழட்டி விட்டீர்கள். அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் எடப்பாடி பேசியதை வைத்து பார்க்கும் ஓபிஎஸ் போன்றவர்களை அவர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்று தெளிவாகிறது. அதன் காரணமாகவே அமித்ஷா தற்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியே வந்து ஒன்றும் பேசாமல் இருப்பதை பார்க்கிறபோது, அமித்ஷா எடப்பாடியை வைத்து இனிமேல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்தால் 39 சதவீதம் வாக்குகள் வரும். அதை வைத்து மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் வாக்குகளை திருடி பாஜகவை எப்படி வெற்றிபெற வைத்தார்களோ, அதேபோல் எடப்பாடியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற திட்டத்தை வகுத்துதான் அமித்ஷா 39 சதவீதம் என்று சொன்னார். அதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிந்த உடன் தான், இனிமேல் ஒத்துவராது என்கிற முடிவுக்கு அமித்ஷா வந்துவிட்டார். செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருப்பார். ஆனால் டெல்லி மேலிடம் அதை சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் சந்திப்பு நடக்காமல் செங்கோட்டையன் பொய் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. அதிமுகவை மீட்டு எடுப்பதோ, ஒருங்கிணைப்பதோ பாஜகவின் உதவி இல்லாமல் சாத்தியம் இல்லை என்று அனைவரும் நம்புகிறார்கள். இவர்களுடைய ஒற்றுமையின்மையை கண்டு அமித்ஷாவுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது. அப்படி அதிமுகவை சேர்க்க முடியாவிட்டால், அழித்துவிட வேண்டியது தான் அவர்களின் திட்டமாக இருக்கும். அதில் இருந்து பாஜக வளர வேண்டும். இதற்கு இடம் அளிக்கு நபராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

திமுக ஐசியூவில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மிகவும் வலிமையாக 45 சதவீத வாக்குகளுடன் உள்ளன. திமுக அரசின் மீது ஆயிரம் விமர்சனங்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி இன்றைக்கு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளார். ஜெயலலிதா, எடப்பாடி ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டுவந்த 5.8 லட்சம் கோடி அன்னிய முதலீடுகளில் 10 சதவீதம் கூட அவர்களால் கன்வர்ட் செய்ய முடியவில்லை. ஆனால், 4.5 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டுவந்து, 80 சதவீதம் கன்வர்ஷன் செய்துள்ளார் ஸ்டாலின். கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளபோதும் அவர்களை அரவணைத்து செல்கிற தலைவராக ஸ்டாலின் உள்ளார். இன்றை சூழலில் அதிமுகவுக்கு 20 சதவீதம் உள்ளது. பாஜகவின் 18 சதவீதம் வாக்குகளில் ஓபிஎஸ், டிடிவி, பிரேமலதா, பாமக போன்றவர்கள் இல்லை. எனவே அவர்களுக்கு 5 சதவீதம் வாக்குகள் தான் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் 25 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படி 45 சதவீத வாக்குகளை ஜெயிப்பீர்கள்? அதிமுக – பாஜக கூட்டணி இரண்டாம் இடத்தை இழந்துவிட்டது. விஜய் தலைமையில் டிடிவி, ஓபிஎஸ், பாமக, தேமுதிக போன்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் அவர்கள் இரண்டாவது இடத்தை பிடிக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


