கீழடி, மகாபாரதத்துடன் தொடர்புடையது என்று பாஜக எழுப்பியுள்ள சர்ச்சையை விஜய் கையில் எடுத்து அரசியல் செய்திருக்க வேண்டும். ஆனால் திமுக அதை சிறப்பாக செய்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம், கீழடி குறித்து பாஜக கிளப்பியுள்ள சர்ச்சைகளின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேருந்து பிரச்சார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இந்த பயணத்தை அதிமுக – பாஜக இடையே நிலவுகிற விரிசலை ஒட்டுவதற்கான பயணமாகவும் பார்க்கலாம். அதேவேளையில் நயினாருடைய பேருந்து பயணத்தை விஜயின் பேருந்து பயணத்துடன் ஒப்பிடுவார்கள் என்பதுதான் என்னுடைய வாதம். தொலைக்காட்சிகள் இருவரது பிரச்சார நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புகிற போது விஜய் அளவிற்கு கூட்டத்தை நயினார் காட்ட வேண்டும்.
அப்போது பாஜக பெரிய அளவுக்கு செலவு செய்தால்தான் கொண்டுபோக முடியம். நயினார், தமிழக அரசியலில் நன்கு அறிமுகமான நபர் ஆவார். ஆனால் விஜய்க்கு, அரசியலுக்கு புதியவர் என்கிற அட்வான்டேஜ் இருக்கிறது. பழைய கட்சிகளை கூட்டணி சேர்க்கிறபோது அட்வான்டேஜ் பாதிக்கப்படும் என்பதால் தற்போதைக்கு எந்த கட்சிகளையும் கூட்டணி சேர்க்கக்கூடாது என்று அரசியல் வியூகம் வகுக்கிறார். அவருடைய அரசியல் வியூகம் என்பது தற்போதுதான் தொடங்கியுள்ளது. அது இன்னும் முழுமையாக உருப்பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். அதற்குள்ளாக மழைக் காலம் தொடங்கிவிடும். எனவே அதிகபட்சம் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வரைதான் பயணங்கள் மேற்கொள்ள முடியும். அதற்குள்ளாக அனைத்து கட்சியினரும் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கிக் கொண்டு, 2 மாத இடைவெளி விட்டு பின்னர் அதை ஜனவரியில் பிடிக்க வேண்டும்.
இடையில் தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலம் வந்துவிடும். எனவே அக்டோபர் மாதத்தை விட்டால், ஜனவரி 15ஆம் தேதியை ஒட்டிதான் மீண்டும் அதே அரசியல் பாதைக்கு திரும்ப முடியும். ஆனால் ஆளும் கட்சிக்கு எப்போதும் அரசியலுக்குள் இருப்பதற்கான அட்வான்டேஜ் இருக்கும். மழை பெய்தாலும் நிவாரணம் வழங்க ஆளுங்கட்சியினர் தான் செல்வார்கள். ஆளுங்கட்சி கூட்டணி 8 ஆண்டுகளாக நீடித்திருக்கும் சூழலில், திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் அட்வான்டேஜ் இருக்கும். அதனால் தான் விஜய் கூட்டணி ஆட்சியில் பங்கு என்று கூறிய போதும் யாரும் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் எம்எல்ஏ தங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் பாஜகவுக்கு எவ்வளவு இடங்கள் தரப்படுகிறதோ, அதை விட ஓரிரு இடங்கள் கூடுதலாக காங்கிரசுக்கு தரப்படலாம். அதை தாண்டி இடங்களை தர வாய்ப்பு இல்லை. இதற்கு திமுக தலைமை பதில் அளிக்காமல் இருக்க காரணம் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்போவது ராகுல்காந்தி என்பதால் தான். அதேவேளையில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் இதற்கு பதிலடி கொடுக்க தொடங்கினால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
பாஜகவும் இதேபோன்ற குரல் எழுப்பி தற்போது அடங்கிவிட்டனர். சமீபகாலமாக கோட்டையில் பாஜக அமைச்சர்கள் என்கிற வாசகத்திற்குள்ளாக அவர்கள் செல்வதில்லை. அப்படி போகவும் முடியாது என்று அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால், பாஜகவுக்கு பங்கு கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் காங்கிரசுக்கு பங்கு கிடையாது என்பது தான் தற்போதைய நிலவரமாகும். இதில் விஜய் எந்த இடத்தில் முக்கியத்துவம் பெருகிறார் என்றால்? தமிழகத்தில் பாஜக வெற்றிபெறவே கூடாது என்று நினைக்கின்ற வாக்காளர்களிடம் அவர் முக்கியத்துவம் பெறுகிறார். விஜய் வெற்றி பெறுவதற்கான வழி என்று பார்க்கிறபோது ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய வல்லமை கொண்ட சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதாகும். ஓபிஎஸ், அவருடைய மகன் ரவீந்திர நான், டிடிவி தினகரன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், தேமுதிக, கொங்கு மண்டலத்தில் இருக்கும் சில கட்சிகளை அவர் சேர்க்க வேண்டும். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி வரும் என்று காத்திருந்தார்கள் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை.
வரும் நாட்களில் பீகார் சட்டமன்றத் தேர்தல், SIR போன்றவை வர உள்ளன. இதை எல்லாம் மனதில் வைத்துதான் விஜய் தன்னுடைய பிரச்சார பயணத்தை வகுக்க வேண்டும். இதுபோன்ற தீவிரமான பிரச்சினைகளில் விஜய் இன்னும் தன்னுடைய கருத்தை சொல்லவில்லை. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்று சொல்கிற விஜய்க்கு, அப்படி சொல்ல வேண்டிய கடமையும் இருக்கிறது. நாடு தழுவிய பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை அவர் சொல்ல வேண்டும். காரணம் தமிழ்நாட்டின் நூறு வருட அரசியல் பாரம்பரியத்தை அவர் தன்னகத்தே எடுத்துக்கொள்கிறார். அப்போது அவர் தேசிய அளவிலான பிரச்சினைகளை சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கீழடி மகாபாரதத்துடன் தொடர்பு உடையது என்று பாஜக நிரூபிக்கும் என சொல்லியுள்ளார். கீழடிக்கும், மகாபாரத்திற்கு எந்த தொடர்பும் இருப்பதற்கான சான்று இதுவரை எந்த அகழாய்விலும் கண்டுபிடிக்கவில்லை. அவர் பாஜக தேசிய தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகதான் இதை பேசியுள்ளார். அது பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவை பாதிக்கும் என்றும் அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகிறார் என்றால் கீழடி நாகரிகத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அவர் முதல்வர் ஆகிவிடுவாரா? இது பெரிய பிரச்சினையாகும். இதில் விஜய் அரசியலாக்கி கவனத்தை பெற்றிருக்க வேண்டும். திமுக அதை சிறப்பாகவே செய்கிறது. ஆனால் திமுகவுக்கு போட்டியாக இருக்கும் ஒருவரும் அதை எடுக்க வேண்டும். அப்படி எடுப்பார்களா என்று தெரியவில்லை.
குறைந்தபட்சம் ஒரு அறிக்கைவிட்டு மறுப்பு தெரிவிக்க வேண்டும். தமிழ் அடையாளத்தின் முதன்மை பாதுகாவலர் என்கிற இடத்திற்கு திமுக எப்போதோ வந்துவிட்டது. திமுகவுக்கு போட்டியாக வருபவர்களும் அதை நோக்கிதான் பயணிக்க முடியும். மாநிலங்களுக்கான முதன்மை பாதுகாவலர் அரசியலை கடைபிடிக்கிற திமுக உடன் அதிமுக போட்டியிட வேண்டும். ஆனால் அவர்கள் பாஜக உடன் கூட்டணியில் இருக்கிறார்கள். விஜய், போட்டி போட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கான அரசியல் வியூகம் தெளிவாக இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.