அதிமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேமுதிக அறிமுக வேட்பாளர் கூட்டத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முதியவரால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி அறிமுக கூட்டம் ஆவடி பட்டாபிராம் பகுதியில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அலெக்சாண்டர், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் மேடையில் பேசிக் கொண்டிருந்த அமைப்புச் செயலாளர் திருவேற்காடு சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஆகியோர் பேசுகையில், குடிபோதையில் கட்சி மூத்த உறுப்பினர் முதியவர் ஒருவர் இடையில் குறுக்கிட்டு பேசுவதும் கூட்டத்தில் இருப்பவர்களிடம் சண்டைக்கு செல்வதுமான அட்டகாசங்களை ஆரம்பம் முதலே செய்து கொண்டிருந்தார், இதனால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் அறிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் கு. நல்லதம்பி பேசுவதற்கு முன்பே கூட்டத்தில் இருந்தவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்ததால், இருக்கைகள் ஆங்காங்கே வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின்,மாதவரம் மூர்த்தி,அப்துல் ரஹீம் பி.வி.ரமணா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் மற்றும் கழக அமைப்பு செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.