மக்கள் பணியில் திமுக எப்பொழுதும் முதன்மை இடத்தில் இருந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோயில் பதாகை பகுதியில் உள்ள 6வது வார்டில் ஏராளமான குடியிருப்புகள் அமைத்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் என பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி முதல் கட்டமாக வருவாய்த்துறை சார்பில் கிரிஸ்ட் காலனி பகுதியில் 114 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. கிரிஸ்ட் காலனி பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் கலந்துகொண்டு 114 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் நாசர், மக்கள் பணியில் திமுக எப்பொழுதும் முதன்மை இடத்தில் இருந்து வருவதாக குறிப்பிட்டார். 6 வது மாமன்ற உறுப்பினர் பைரவி ஜான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாலா சன் பிரகாஷ், 6 வது வார்டு வட்டச் செயலாளர் பே.டிசோசா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.