ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0
கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் ஆவடி அருகில் அண்ணனூர் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் 4வது கட்ட கஞ்சா சோதனை இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை நடத்துவதற்கு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், கார்த்திக் உள்ளிட்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.
அப்போது அண்ணனூர் ரயில் நிலையம் அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை நோட்டமிட்ட போலீசார் அவர்களிடம் சென்று பேச்சு கொடுத்த போது இருவரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ 400 கிராம் எடை கொண்ட கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கவிராஜ்(24), அஜித் குமார்(25) என்பது தெரியவந்தது.
அவர்கள் அவ்வபோது அம்பத்தூர், கொரட்டூர், அண்ணனூர் ரயில் நிலையங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் கஞ்சா வேட்டை 4.0 என்ற 4ம் கட்ட கஞ்சா சோதனையின் முதல் நாளான இன்று 20 கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.