ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அருகே அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரம் ஆவடி. இங்கே ராணுவத்துறை தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் வாழக்கூடிய மினி இந்தியாவாக ஆவடி வளர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு ஆவடி காவல் ஆணையரகம் அமைக்கப்பட்டு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மக்கள் அதிகம் கூடுகின்ற மாநகராட்சியின் மைய பகுதியில், சென்னை- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆவடி பேருந்து நிலையம் பழைய தோற்றத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது.
1989 ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணி முடிந்தது. அதன் பின்னர் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 தேதி ஆளுநர் ஆட்சியில் ஆவடி பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 1998 ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, அவருடைய நாடளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து மறு சீரமைப்பு செய்யப்பட்டது. அப்போது அமைக்கப்பட்டதுதான் ஆவடி பேருந்து நிலையம்.
ஆரம்பத்தில் ஆவடி – சென்னை -க்கு இடையே கிண்டி, தாம்பரம், பாரிஸ், அண்ணா சதுக்கம், ஆவடி டவுன்ஷிப், ரெட்ஹில்ஸ் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய வழித்தடங்களுக்கு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.
ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் மதுரை, திருநெல்வேலி, திருப்பதி, ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் ஆவடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு அதிக எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்து பற்றாக்குறை தற்போது இருந்து வருகிறது.
பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்றவாரு ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்தபடவில்லை. தற்போது, நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலை மாலை நேரங்களிள் கடும் நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அதேபோல், பேருந்துகளும் அதற்கான இடங்களில் நிறுத்த படுவதும் இல்லை. இதனால், புதிதாக வரும் பயணியர் தடுமாறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், மெத்தனமாக பதில் அளிக்கின்றனர். பேருந்து நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை, பொதுக்கழிப்பிடமும் முறையாக பராமரிக்கபட வில்லை.
மேலும், பொதுக்கழிப்பிடம் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் கழிப்பறை அருகே துர்நாற்றம் வீசுவதால் பேருந்தில் அமரும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து பெண் பயணியர் ஒருவரிடம் பேசும் போது ,
‘பேருந்து நிலையத்தில் உள்ள அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு வந்து செல்லும் பயணியர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. பேருந்து ஓட்டுனர்கள் அவரவர் விருப்பம் போல், பேருந்துகளை, நிலையத்தில் நிறுத்தாமல் சென்று மக்களை அலைகழிக்கின்றனர். இதனால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
எனவே ஆவடி பேருந்து நிலையத்தில் மக்களுக்கு தகுந்த அளவிற்கு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையத்திற்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அருகாமையில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டை காலி செய்து கூடுதல் பேருந்துகளை நிறுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.