அண்ணாசாலை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீவிபத்தால் மின்சார வாரியம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணைய சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு நபர் கட்டிடத்தில் சிக்கியதால், உடனடியாக தீயணைப்பு துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் எழும்பூர், வேப்பேரி, கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 6 வது மாடியில் இருந்த அந்த ஊழியரை மீட்டனர். 2 வது தளத்தில் பற்றிய தீயால் கட்டிடத்தின் 7 தளங்கள் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்தது.

மொத்தம் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிராண்டோ ஸ்கை லிப்ட் மூலமாக சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் தொலைதொடர்பு சேவையின் கண்ட்ரோல் ரூம், சர்வர் பொருட்கள், ஏசி, கேபிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கட்டிட்டத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 100 அவசர எண் கால் அழைப்புகள் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாரியம் உள்ளிட்ட இடங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் கட்டணம் ஆன்லைன் டிராக்ஷன், பில் பேமண்ட் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தீவிபத்தால் சுமார் 2 கிமீ சுற்றுவட்டார தொலைவில் பி.எஸ்.என்.எல் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறுகாரணமா? என சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஎஸ்என்எல் கட்டிடத்தில் தீ விபத்து: சென்னையில் அவசர கால உதவி எண்கள் பாதிப்பு!


