சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 4 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாகவே ஹோட்டல் உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.. சவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு, ஃபாஸ்ட் புட்டால் வயிற்றுக்கோளாறு, பரோட்டா சாப்பிட்ட சாப்பிட்ட சிறுமி பலி, பிரியாணியில் இறந்த தவளை என ஹோட்டல் உணவுகள் தொடர்பான பல செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் இடம்பிடித்துவிடுகின்றன. இது ஒருபுறமிருக்க ஹோட்டல்களில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை என்கிற புகார்களும் வந்துகொண்டிருக்கின்றன. இதனடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அவ்வப்போது உணவகங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும் இந்த புகார்கள் குறைந்தபாடில்லை..
இந்த வரிசையில் மற்றுமொரு சம்பவமாக சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்ட 4 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் குடும்பத்தினருக்காக பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று அந்த உணவை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே 4 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உறவினர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான புகாரையடுத்து சென்னை உணவு பாதுகாப்பு கழகத்தின் தலைவர் சதீஷ் குமார் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு , சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயண பொருட்கள் உணவில் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.