சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின் வழித்தடம் 3ல் ‘சிறுவாணி’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், சேத்துப்பட்டு நிலையத்தில் இருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வந்தடைந்தது.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தில் வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. நீளத்திற்கு 28 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 19 உயர்மட்ட நிலையங்கள் அமைக்கப்பட உளளன. வழித்தடம் 3-ல் கெல்லிஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி வழித்தடம் 3-ல் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 703 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை இன்று வந்தடைந்தது. இதில் கூவம் ஆற்றின் அடியில் 8.0 மீட்டர் ஆழத்தில் 51 மீட்டர் நீளத்தை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது. இதனை மெட்ரோ ரயில் நிர்வாகப் பணியாளர்கள், அலுவலர்கள் பலரும் மலர் தூவி வரவேற்றனர்.