பூந்தமல்லி முதல் போரூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்–2, வழித்தடம்–4 இல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன், பாதுகாப்பு சான்றிதழ் பெறுதல் முக்கியமான கட்டமாகும். அதற்காக இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்ச் டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (RDSO) அமைப்பு சோதனைகளை மேற்கொண்டது. ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனைகள் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கவனத்தில் கொண்டு நடத்தப்பட்டன.
சோதனை ஓட்டத்தின் போது ரயில்கள் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன. இதில் ரயில்களின் இழுவை திறன், பிரேக்கிங் செயல்திறன், தண்டவாள தரம், மின்சார வசதி, காற்றழுத்தம், அவசர கால பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. மேலும், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில் பெட்டிகளின் தரம் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டது.
இத்துடன், பூவிருந்தவல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான மெட்ரோ பாதைக்கு தேவையான பாதுகாப்பு சான்றிதழ் பெறும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மெட்ரோ சேவை விரைவில் துவங்கும் வாய்ப்புள்ளது.