கோல்ட்ரிஃப் மருந்தை விநியோகித்த காஞ்சிபுரம் நிறுவனத்தின் மீதான தமிழக அரசின் நடவடிக்கையால் பல மாநிலங்களில் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் 527 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 18,264 புதிய ரத்ததானம் செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து 14,847 யூனிட் ரத்தம் பெறப்பட்டு உள்ளது என்றார்.
ரத்ததானம் செய்வதில் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்றும் “ரத்ததானம் செய்வோம், நம்பிக்கை கொடுப்போம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் 101 அரசு ரத்ததான மையங்கள், 252 தனியார் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் அளவுக்கு ரத்தம் உள்ளதால், ஆரோக்கியமான நபர்கள் ரத்ததானம் செய்யலாம் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ஒரு சம்பவம் எங்கு நடைபெற்றதோ, அங்குள்ள அந்த மாநில போலீசார்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதன் அடிப்படையிலேயே மத்திய பிரதேச மாநில காவல்துறையினர் தமிழகம் வந்து, இருமல் மருந்து விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். அம்மாநில போலீசாருக்கு தமிழ்நாடு காவல்துறை போதிய ஒத்துழைப்பு அளித்தது என அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 1-ம் தேதி இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மத்திய பிரதேச அரசு இதுகுறித்து தமிழகத்துக்கு தகவல் தெரிவித்ததை விளக்கிய மா.சு., இதனைத் தொடர்ந்து மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நச்சுத்தன்மை மற்றும் கலப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டு, மத்திய பிரதேச அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் புதுச்சேரி மற்றும் கர்நாடக அரசுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மத்திய அரசும் மத்தியப் பிரதேச அரசும் இந்த மருந்தில் தப்பு இல்லை என விட்டுவிட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆனால், தமிழ்நாட்டில் தான் இதனை உறுதி செய்து 3-ம் தேதியில் இருந்து இந்த மருந்து உற்பத்திக்கு தடை விதித்ததையும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, பல மாநிலங்களில் ஏற்பட இருந்த பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் அதிகாரிகள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்தியா முழுவதும் உள்ள இதுபோன்ற மருந்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்த காரணத்தால் தான் உயிரிழப்பு தடுக்கப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் முதல் ரூ.15000 கோடி வரை மருந்து பொருட்கள் ஏறத்தாழ 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதை அரசியலாக்கி பொதுவெளியில் விவாதிப்பது நாகரீகமாக இருக்காது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஐயாவுக்கு ஏதாவது ஆச்சின்னா, தொலைத்து விடுவேன்.. யாரையும் சும்மா விடமாட்டேன் – அன்புமணி ..!!