மருத்துவர் அய்யாவிற்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன் என்றும், ஐயாவை வைத்துக்கொண்டு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி காட்டமாக பேசியுள்ளார்.

பாமக நிறுவனர் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு, அவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அத்துடன் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், 12ம் தேதி வரை யாரும் ராமாதாஸ் அவர்களை சந்திக்க வர வேண்டாம் என பாமக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராம்தாஸை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று சென்னை உத்தண்டியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, “மருத்துவ பரிசோதனைக்காக ஐயா அவர்கள் மருத்துவமனைக்கு சென்றார்கள். அதன் பிறகு ஆஞ்சியோ செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறார். மருத்துவ சோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லிவிட்டார்கள். ஆனால் அய்யாவை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு வந்து பாருங்கள், வந்து பாருங்கள் ஃபோன்மேல் ஃபோன் போட்டு என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் அசிங்கமாக உள்ளது. ஐயா ராமதாஸ் அவர்கள் என்ன கண்காட்சியா?
ஐயாவின் உயிர், ஐயாவின் பாதுகாப்பு முக்கியம். ஐயாவின் அறைக்குள் பாதுகாப்புக்காக யாரையும் உள்ளே விடமாட்டேன். ஐயாவிற்கு ஏதாவது என்றால் உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்; யாரையும் சும்மா விடமாட்டேன். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; நான் கோவத்தில் இருக்கிறேன். ஐயாவை வைத்து டிராமா செய்து, நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.