யானைகவுனி பகுதியில் தங்க நகை பட்டறையில் தங்க நகைகள் திருடிய வழக்கில் இருவர் கைது. 890 கிராம் தங்க நகைகள் பறிமுதல்.
சென்னை பிராட்வே, வால்டாக்ஸ் ரோட்டில், அதோர் அலி, வ/35, த/பெ.அமிர் அலி என்பவர் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 03.02.2025 அன்று அதிகாலை மேற்படி தங்க நகை பட்டறையில் இருந்து சுமார் 1,066 கிராம் எடையுள்ள தங்க நகைகள், மேற்படி நகை பட்டறையில் தங்க நகைகள் பாலிஸ் போடும் வேலை செய்து வந்த மேற்கு வங்கம் மாநிலத்தைச்சேர்ந்த சபுல் பியாடா என்பவர் திருடிக்கொண்டு தப்பிச் சென்றதாவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்க நகைகளை மீட்டு தரும்படி மேற்படி கடையின் உரிமையாளர் அதோர் அலி என்பவர் C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
C-2 யானைகவுனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.அப்துல் அலிம் கெயின், வ/23, த/பெ.அஜிஜார் கெயின், மேற்கு வங்கம் மாநிலம், 2.நூர் ஹசன் முல்லா, வ/23, த/பெ.ஹாசன் முல்லா, மேற்கு வங்கம் மாநிலம் ஆகிய இருவரை திருச்சி மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் சைபுல் பியாடா மேற்படி கடையில் தங்க நகைகளை திருடி அவரது நண்பர்களான மேற்படி நபர்களிடம் கொடுத்துள்ளது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் 890 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சபுல் பியாடா என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் நேற்று (04.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.