கங்குவா படத்தின் ரிலீஸ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வரும் நவம்பர் 14 திரையரங்களில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கங்குவா. உலகம் முழுவதும் பல மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் முதல் ட்ரைலர் வெளியாகி பார்வையாளர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. படத்தின் கதை இதுதான் என்று பல கதைகள் இணையத்தில் உலா வந்தன. தற்போது ட்ரெய்லரில் ரிசர்ச் லேப்-இல் இருந்து தப்பி செல்லும் சிறுவனை ஒரு கும்பல் ஏதோ ஒரு காரணத்திற்காக தேடி வருவது போலவும் அச்சிறுவனை அந்த கும்பலிடம் இருந்து காக்கும் கடமையை நிகழ்காலத்தில் வாழும் சூர்யா ஏற்பது போலவும் ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பீரியாடிக் காலகட்டத்திலும் சூர்யாவுடன் ஒரு சிறுவன் இருப்பது போல காண்பிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்திலும் அந்த சிறுவனை ஏற்கும் பொறுப்பு சூர்யாவிடம் இருப்பது போலவும் தெரிகிறது. இது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் எவ்வாறு தொடர்பு படுத்தப்படும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் ட்ரெய்லரில் காட்சி அமைப்புகள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக ட்ரெய்லரின் இறுதியில் தங்கப் பற்களுடன் வில்லன் சிரிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. சிரிப்பொலியை வைத்து பார்க்கும் பொழுது அது கார்த்தியாக இருக்க வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே உள்ளது. படக்குழுவினர், ஏற்கனவே ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியுள்ளபடி விஷுவலாக, மிரட்டலாக கங்குவா இருக்கும் என்பதை ட்ரெய்லரிலேயே தெளிவுபடுத்தி விட்டனர். எனவே ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி தீர்க்க தயாராகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.