தமிழ் சினிமாவில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடனே சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் மறைவிற்கு யார் மீதும் குறை சொல்ல முடியாது – ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் பேட்டியளித்துள்ளாா்.
சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியனில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் இறப்பு குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக, சங்கத் தலைவர் அசோக் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைவர் அசோக், தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க பாதுகாப்பு அம்சங்களுடனே சண்டைக் காட்சி படபிடிப்புகள் நடைபெறுகிறது. அதேபோல தான் பா. ரஞ்சித் படபிடிப்பு தளத்திலும் நடைபெற்றது. இது எதிர்பாராத இழப்பு தவிர கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து அல்ல. சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கவே இந்த சந்திப்பை நடத்தினோம்.

சண்டை கலைஞர் மோகன் ராஜ் மறைவிற்கு கடந்த சனிக்கிழமை இயக்குநர் பா. ரஞ்சித், மோகன் ராஜ் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும் மறைந்த சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் குழந்தைகளின் கல்வி செலவிற்கு முழுவதுமாக உதவுவதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். அதோடு சிம்பு 1 லட்சமும், வேட்டுவம் படத்தின் ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்புராயன் 15 லட்சம் வழங்கியுள்ளார். அரசு நலவாரியம் சார்பாக ஒரு லட்சத்திற்கு விண்ணபித்துள்ளோம். சண்டை பயிற்சியாளர் சங்கம் சார்பாக 10 லட்சம் மற்றும் விபத்து காப்பீடு மூலமாக 5 லட்சம் அவருக்கு கிடைத்துள்ளன என்றார்.
ஹாலிவுட் திரைப்படங்களில் சண்டை காட்சிகளை படமாக்கப்படும் பாதுகாப்பு முறைகளை ஏன் தமிழ் சினிமாவில் கொண்டுவர இயலவில்லை என்ற கேள்விக்கு? சண்டை காட்சிகளை பொறுத்தவரை ஹாலிவுட் தரத்தை நோக்கி தொடர்ந்து தமிழ் சினிமா பயணித்து வருகிறது ஆனால் உடனடியாக நடைமுறை படுத்த முடியாது என்றார். இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை எந்த ஸ்டண்ட் இயக்குனரும் குறை வைப்பது இல்லை . இறுதியாக மோகன்ராஜ் சம்பவத்தில் கூட அனைத்து விதமான பாதுகாப்பையும் நேரில் சென்று உறுதிப்படுத்தினேன் எனக் கூறிய சண்டை பயிற்சியாளர் சங்கத்தின் தலைவர் அசோக் படப்பிடிப்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை செய்தியாளர்களிடம் காட்டினார்.
மும்பையில் உள்ள சண்டை ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இன்சூரன்ஸ் எடுத்தது போன்று தமிழில் நடிகர் சூர்யா உள்ளிட்ட சில நடிகர்களும் இன்சூரன்ஸூக்கு உதவியுள்ளனர். ஆனால் அதனை தொடர்ந்து கடைபிடிக்க முடியவில்லை. ஒரு வருடத்தில் ஒரு ஸ்டண்ட் கலைஞர்களுக்காக கட்டப்படும் இன்சூரன்ஸ் தொகையை விட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செலவிடும் தொகை அதிகளவில் இருப்பதால் எந்த நிறுவனமும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கான இன்சூரன்ஸ் அளிப்பதில் முன்வரவில்லை என கூறினர்.
இறுதியாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கான அடுத்தகட்ட பாதுகாப்பு குறித்து விரைவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கூடி முக்கிய முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர்.