விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜித்தின் 62 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் தற்போது லைக்கா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து பிற்போடப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு விடாமுயற்சி திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. புதிய ரிலீஸ் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் விடாமுயற்சி திரைப்படமும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.