தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதற்காக”தமிழக வெற்றி கழகம்” என்னும் கட்சியையும் தொடங்கியுள்ளார். தற்போது “The Greatest Of the All Time” படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரு படத்தின் படப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார் விஜய். 2024 நாடாளுமன்ற தேர்தல் தன்னுடைய இலக்கு இல்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் ஒரே குறி என்பதையும் அவர் கூறியுள்ளார். மேலும் திரைத்துறையினரும் பல்வேறு அமைப்புகளும் விஜயின் அரசியல் வருகைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி விஜய் பற்றிய அரசியல் ரீதியிலான கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில் காவி கட்சி ஆதரவாளர்கள் ஜோசப் விஜய்க்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பது போல் பேசியுள்ளார். மேலும் கஸ்தூரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ட்விட்டர் ஃபாலோவர் ஒருவரையும் தரக்குறைவாகத் திட்டி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து பேட்டி அளித்த கஸ்தூரி, “பாஜக மட்டும் தான் விஜயால் பாதிப்புக்கு உள்ளாகாத கட்சி. திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கியை விஜய் கபளீகரம் செய்யப் போகிறார்” என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.