தளபதி 69 படத்தின் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு The Greatest Of All Time என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேசமயம் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
அது மட்டும் இல்லாமல் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் எனவும் அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனால் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி வெற்றிமாறன், எச் வினோத், கார்த்திக் சுப்புராஜ் இவர்களில் யாரேனும் ஒருவர் இயக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது. அதன்படி தளபதி 69 படத்தின் அறிவிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தளபதி 69 படத்தை இயக்க இருப்பது யார் என்பதை ஏப்ரல் மாதம் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையில் தளபதி 69 திரைப்படம் DVV என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாக தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.