Homeசெய்திகள்க்ரைம்அபுதாபியிலிருந்து பெங்களூர் வந்த 2 கடத்தல் குருவி….ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ தங்கம் பறிமுதல்….6 பேர்...

அபுதாபியிலிருந்து பெங்களூர் வந்த 2 கடத்தல் குருவி….ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ தங்கம் பறிமுதல்….6 பேர் கைது

-

துபாய் அபுதாபியில் இருந்து ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ கடத்தல் தங்கத்துடன், விமானங்களில் சென்னை வந்து கொண்டு இருந்த 2 கடத்தல் பயணிகள், கடைசி நேரத்தில் விமானங்களை மாற்றி, பெங்களூர் சென்றனர்.

ஆனாலும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர், சென்னையில் இருந்து விமானத்தில் பறந்து சென்று, பெங்களூர் விமான நிலையத்தில், கடத்தல் பயணிகளை மடக்கிப்பிடித்து, தங்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை.

துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து பெரும் அளவு தங்கம் சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த ஒரு பயணியையும், அபுதாபியில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த மற்றொரு பயணியையும், சென்னைக்கு வரும் விமானங்களில், தங்களுக்கு செய்திருந்த டிக்கெட்டுகள் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டு, துபாய், அபுதாபியில் இருந்து பெங்களூர் செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகள் மாற்றப்பட்டன. இந்த இரண்டு பயணிகளும் சென்னையைச் சேர்ந்தவர்கள். அப்படி இருக்கையில் இவர்கள் சென்னை  வராமல், பெங்களூர் செல்வது ஏன் என்று மத்திய வருவாய் புலனாய் துறையினர் ரகசியமாக விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் தங்கம் கடத்தி வருவதாகவும், இதை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்து, சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை கைப்பற்ற தயார் நிலையில் இருக்கின்றனர் என்பது தெரிந்து, அவர்கள் டிக்கெட்களை பெங்களூர் விமானத்திற்கு மாற்றியுள்ளது தெரியவந்தது.

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறையின் தனிப்படையினர், சென்னையில் இருந்து, விமானத்தில் பெங்களூர் விரைந்தனர். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு இரண்டு தனியார் பயணிகள் விமானங்கள் வந்து தரையிறங்கின.

பெங்களூர் விமான நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, இரண்டு சென்னை பயணிகள் வெளியில் வந்தனர். அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்த அதிகாரிகள், தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர்.

அப்போது அவர்களுடைய உள்ளாடைகள் மற்றும் உடலில் கால்களில் போடப்பட்டிருந்த பேண்டைட் உரைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப் பசைகளை கைப்பற்றினர். இருவரிடம் இருந்து 7.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.5.2 கோடி. இதை அடுத்து சென்னை பயணிகள் இரண்டு பேரையும், மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதோடு அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் துபாய், அபுதாபியில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகின்றனர். இவர்களை தங்கம் கடத்தும் கும்பல் சந்தித்து பேசி, கடத்தல் குருவிகளாக மாற்றியுள்ளனர். அதற்காக இருவருக்கும் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் எனப்படும் முதல் வகுப்பு விமான டிக்கெட்டுகளை, கடத்தல் கும்பல் எடுத்துக் கொடுத்துள்ளது.

அதோடு இருவரும் விமானத்தை விட்டு இறங்கி ஓய்வு எடுப்பதற்காக, பெங்களூர் விமான நிலையம் அருகே நட்சத்திர ஹோட்டலில் ரூம் முன்பதிவு செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் அந்த ரூமுக்கு சென்று ஓய்வு எடுக்கும்போது, சென்னையைச் சேர்ந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர், அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று, பயணிகள் கொண்டு வந்துள்ள கடத்தல் தங்கத்தை வாங்கிக் கொண்டு, பெங்களூரில் இருந்து கார் மூலம் சென்னைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரியா வந்தது.

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று, அங்கு  அறையில் தங்கியிருந்த, சென்னையைச் சேர்ந்த, தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

இதை அடுத்து துபாய், அபுதாபியில் இருந்து விமானங்களில் தங்கம் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பயணிகள், அந்தத் தங்கத்தை வாங்கி வருவதற்காக, பெங்களூர் சென்றிருந்த, சென்னையைச் சேர்ந்த தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 4 பேர், ஆகிய 6 பேரை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு இவர்களை பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சென்னைக்கு அழைத்து வருவதற்கும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

தங்கம் கடத்தும் கும்பல், சென்னைக்கு வரும் விமான டிக்கெட்களை ரத்து செய்துவிட்டு, பெங்களூர் சென்று, அங்கிருந்து காரில், கடத்தல் தங்கத்தை சென்னை கொண்டுவர திட்டமிட்டதை அறிந்து, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பெங்களூர் பறந்து சென்று, அங்கு சென்னையைச் சேர்ந்த கடத்தல் கும்பல் 6 பேரை கைது செய்து,ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ