முன்னாள் அமைச்சர் பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்தி பள்ளப்பட்டி பகுதியில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடியில் ஈடுபட முயன்ற ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் எம்.ஆர்.வி என்ற பெயரில் சீட், பைனான்ஸ் & கோ பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சீட்டு கம்பெனி திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த மூன்று நபர்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்தி சீட்டு கம்பெனி நடத்தி வருவதாக அதிமுகவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்துறையிடம் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜ்குமாரை பிடித்து விசாரித்ததில் அனுமதி இன்றி சீட்டு கம்பெனி தொடங்கியது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பள்ளப்பட்டி பகுதியில் மட்டுமல்லாமல் வேடசந்தூர் பகுதியிலும் இதே போன்று ஒரு சீட்டு கம்பெனி இன்று தொடங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக எம்.ஆர்.வி என்ற பெயரில் பச்சை நிறத்தில் கார்டு அச்சிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்தி சீட்டு மோசடியில் ஈடுபட முயன்ற ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்ததோடு சீட்டுக்கு பயன்படுத்திய நோட்டு மற்றும் விளம்பர நோட்டீஸ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பெயரை பயன்படுத்தி பள்ளப்பட்டி பகுதியில் மோசடியில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் அதிமுகவினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.