மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை உறவினர்களுடன் சேர்ந்த தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும் அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்த பெயிண்டர் முத்துகுமாருக்கும் (30) இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு இடையேயான தவறான உறவை, ராசாத்தியின் மூத்த மகன் மூத்த மகன் வெற்றிவேல் என்பவர் நேரடியாக பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் கடந்த 14ம் தேதி வெற்றிவேல் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
மகன் இறந்த துக்கம் ஒருபக்க இருக்க, முருகேசன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து இளைய மகன் மற்றும் அவரது உறவினர்கள், சண்முகம், பாலாமணி(40), ராசாத்தி, அன்னபூரணி(33), நாகராஜ் ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை 5 மணியளவில் முத்துக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அத்துடன் முருகேசன், சண்முகம் மற்றும் உடன் சென்றவர்கள் முத்துக்குமாரை கத்தி, குத்துவிளக்கு, அரிவாளால் சரமாரி வெட்டியும் , தாக்கியும் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அன்னவாசல் போலீசார், முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துகுமார் மனைவி ரோஜா அளித்த புகாரின் அடிப்படையில், அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராசாத்தி, பாலாமணி, அன்னபூரணி ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான சண்முகம், முருகேசன், நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.