இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து தொழில் கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது.
இந்தியன் வங்கி மேலாளர் ராஜேந்திர பிரசாத் என்பவர் அளித்த புகாரில் போலியான ஆவணங்களை சமர்பித்து வங்கியில் 2.30 கோடி ரூபாய் பெற்று ரமேஷ், வேலவன் தீபக், சரவணகுமார் மற்றும் பவளபாலன் ஆகிய 4 பேரும் கூட்டாக சேர்ந்து வங்கியில் தொழில் கடன் பெற்று ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார். மேலும் கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வங்கி மோசடி புலனாய்வு பிரிவு விசாரணையில், வங்கியை ஏமாற்றும் நோக்கில் V Tech Park என்ற நிறுவனத்தை பெயரளவில் போலியாக துவக்கியும், போலியான மதிப்பீட்டு ஆவணங்களை தயாரித்தும், அதை வங்கியில் சமர்பித்து தொழில் கடனாக 2.30 கோடி ரூபாய் பெற்று வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நீலாங்கரை ரமேஷ்(57) என்பவரை கைது செய்து சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோன்று எத்தனை வங்கிகளை மோசடி செய்தார் என்பது குறித்தும், தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய குற்ற பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். மோசடி செய்த பணத்தை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.