நரிக்குறவ பெண் அஸ்வினி கைது
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியின பெண் அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் தங்கள் சமூகத்தினருடன் உணவருந்த சென்றார். அப்போது கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோ மூலம் புகார் அளித்திருந்தார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து, அதே கோயிலுக்கு அஸ்வினியை அவரது குடும்பத்தினருடன் அழைத்து சென்ற அமைச்சர் சேகர்பாபு, அவர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். அதுமட்டுமின்றி, கடந்தாண்டு தீபாவளியின்போது, நலத்திட்ட உதவிகளை வழங்க பூஞ்சேரி பகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அஸ்வினி வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அஸ்வினி மீது புகார்கள் குவிந்தன. தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டப்பட்டவர் எனக் கூறி, ஹோட்டல்களுக்கு சென்று மிரட்டுவது, மருந்துகடை, டீக்கடை, பேக்கரிக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றுவது, தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் அஸ்வினி ஈடுபட்டார். இந்நிலையில் மாமல்லபுரத்தில் ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்யும் நந்தினி என்ற பெண்ணிடம் அஸ்வினி தகராறு செய்ததாக தெரிகிறது. இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியபோது, தனது கையில் இருந்த கத்தியால் நந்தினியின் கையை கிழித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நந்தினி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அஸ்வினி கைது செய்யப்பட்டார்.