திருநின்றவூரில் தண்டவாளத்தில் காயங்களுடன் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன். கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசியுள்ளதாக பெற்றோர் உறவினர்கள் குற்றச்சாட்டு.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொமக்கம் பேடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் ரேணுகா தம்பதியரின் மகன் விஜயகுமார்(18) கடந்த மாதம் 25 ஆம் தேதி மாலை முதல் காணவில்லை என தெரிய வருகிறது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட வெங்கல் காவல் நிலையத்தில் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தபால் மூலம் புகாரளிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடப்பட்டு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சம்மனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத உடல் இருப்பதாக விஜயகுமாரின் பெற்றோருக்கு மாவட்ட காவல்துறை மூலம் தகவல் அளித்தனர். அங்கு உறவினர்களுடன் சென்று பார்த்த போது விஜயகுமாரின் உடல் இரண்டு பாகமாக துண்டிக்கப்பட்டு இறந்தது தெரிந்தது. இதைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

ரயில் விபத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிகாலையில் திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்ததாக ரயில்வே காவல்துறை தரப்பில் கூறியுள்ளனர். கழுத்தில் வெட்டு காயத்துடன் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதால் யாராவது கொலை செய்து தண்டவாளத்தில் வீசி இருக்கலாம் என பெற்றோர் உறவினர்களுக்கு சந்தேகம் அடைந்தனர். தற்போது விஜயகுமார் உயிரிழந்ததாக கூறப்படும் இடத்தினை பாா்த்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மன வேதனை அடைந்தனர். மேலும் தங்களது மகன் விஜயகுமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அதிருப்தியில் உள்ளனர்.
உயிரிழந்த விஜயகுமாரின் உடல் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில் இன்று சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் செல்போன் மற்றும் காலணிகளை அந்த பகுதியில் இருந்து மீட்டனர். பின்னர் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர். மரணம் அடைந்த விஜயகுமாரின் தந்தை மற்றும் உறவினர் திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே செய்தியாளர்களை சந்தித்தனர். வெங்கல் காவல் நிலையத்தில் 26 ஆம் தேதி தனது மகன் காணவில்லை என புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மரணத்தில் மர்மம் உள்ளது. விபத்து இல்லை. கொலை தான்.
உடல் மீட்கப்பட்ட இடத்தில் உள்ள ரயில்வே சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்ய வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். கஞ்சா கும்பல் மூலம் விஜயகுமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.


