திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கனமழை காரணமாக செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், அணையிலிருந்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் படவேடு செண்பகத் தோப்பு அணை உயர்மட்டம் முழு கொள்ளவு எட்டும் நிலையானது ஏற்பட்டது.
மேலும் செண்பகத் தோப்பு அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்வளத்துறை சார்பில் கடந்த திங்கட்கிழமை அன்று அணை திறக்கப்பட்டது. 2 மதகுகள் வழியாக கடந்த 4 நாட்களாக வினாடிக்கு சுமார் 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ஆரணி போளூர் கண்ணமங்கலம் ஜவ்வாதுமலை ஆகிய பகுதிகளில் அதிகப்படியான கனமழை பெய்ததின் காரணமாக, அணையின் முழு கொள்ளளவான 62 அடிக்கு தற்பொழுது 55 அடி நிரம்பியதால், செண்பகத்தோப்பு அணைக்கு வருகின்ற 375 கன அடி நீர் அப்படியே வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் இந்நீரானது கண்ணமங்கலம் கொங்கரம்பட்டு காட்டுகாநல்லூரில் உள்ள நாகநதி ஆற்றிலும் படவேடு சந்தவாசல் குன்னத்தூர் உள்ளிட்ட ஆற்றிலும் கலந்து ஆரணியில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரமாக உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்வளத் துறையினர் உபரி நீர் வெளியேற்றத்தை படிப்படியாக குறைப்பதாக தெரிவித்துள்ளனா்.


