மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவின் போது பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியன் சிலிண்டர் வெடித்த விபத்தில் இரண்டு கால்களும் துண்டித்த நிலையில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு ; மேலும் 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் ஆற்று திருவிழா நடைபெறும். இந்த ஆற்று திருவிழாவில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆற்று திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்புறம் ஹீலியம் பலூன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இரவு சுமார் 7 மணியளவில் அந்த பலூன்களுக்கு ஹீலியம் நிரப்பும் சிலிண்டர் திடீரென வெடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் இருந்த பலூன் கடை உரிமையாளர் ஏழுமலை உட்பட 19 பேர் கை,கால்கள் சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரந்த ஆம்புலன்ஸ்கள் அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில், வேங்கயவெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்பவர் இரண்டு கால்களும் துண்டான நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலூன் கடை உரிமையாளரான ஏழுமலை,திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாதேஷ் (11),சினேகா (17),இந்திரராணி (50) உள்ளிட்ட 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் எதிர்பாரத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 13 பேர் திருவண்ணாமலை மருத்துவ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அதில் கலா எனும் பெண் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இது போன்ற சிலிண்டர்களுக்கு உரிமம் உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எதிர்காரத்தில் ஆற்று திருவிழாவில் இதுபோன்ற விபத்து ஏற்படுத்தக்கூடிய சிலிண்டர்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, விசாரணைக்கு பின்னரே தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்திலிருந்து தடவியல் நிபுணர் ராஜீவ் தலைமையிலான தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, வெடித்து சிதறிய ஹீலியம் சிலிண்டரின் உதிரி பாகங்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த ஹீலியம் சிலிண்டர் வாயு கசிவு காரணமாக விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் அருகில் இருந்த மற்றொரு ஹீலியம் சிலிண்டர் விபத்துக்குள்ளாகமால் இருக்க , தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் அந்த சிலிண்டரை குளிச்சி செய்து, அதிலிருந்த ஹீலியம் வாயுவை பலத்த பாதுகாப்புடன் முழுமையாக வெளியேற்றினர். தொடர்ந்து, இங்கு இருந்த அனைத்து அயாயகரமான பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


