நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2 கோடியே 68 லட்சம் மாற்றுத் திறனாளிகள் நாட்டில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான கல்வி, உயர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இட ஒதுக்கிடு வழங்கியும் முறையாக கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2023, 2024ஆம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பியதாகவும், அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை என கூறியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
SIR… கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தவெக…


