மாங்காடு நகராட்சியில் 70 வயது மூதாட்டியை தெரு நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டி பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி அண்ணா தெருவை பகுதி சேர்ந்தவர் சாந்தா. 70 வயதான மூதாட்டி இவர் மாலை வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது சாலையில் இருந்த தெரு நாய் ஒன்று அவரது இரண்டு கால்களையும் கடித்து குதறியுள்ளது. இதில் நீண்ட நேரமாக மூதாட்டி நாயுடன் போராடி உள்ளார். பின்னர் மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நாயிடம் இருந்து மூதாட்டியை மீட்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மூதாட்டியை நாய் கடித்து குதறியதில் அவரது இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மூதாட்டியை தெரு நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாங்காடு நகராட்சி அண்ணா தெரு பகுதியில் செயல்படும் இறைச்சிக்கூடங்கள் முறையாக கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அங்குள்ள தெரு நாய்களுக்கு அதனை உணவாக வழங்கி வருவதால் அங்குள்ள தெருநாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக வெறிபிடித்து திரிவதாகவும், இதனால் அடிக்கடி அப்பகுதியில் மனிதர்களை நாய் கடிக்கும் செயல் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக அங்குள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.



