ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் தொடர்பான அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் சிறப்பு எபோலா வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) எபோலா வைரஸ் நோயை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறைகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளன. குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதிகளில் தீவிர பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், பன்னாட்டு விமான நிலையம் உள்ள திருச்சியில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காரணமில்லாத ரத்தப்போக்கு போன்ற எபோலா அறிகுறிகள் காணப்படும் பயணிகளை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பிரத்யேக எபோலா சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட தனி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வார்டில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் வீதம் மொத்தம் 10 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து நவீன மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இந்த தனிமைப்படுத்தல் வார்டு முழுமையாக தயார் நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கான சுகாதார பரிசோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…
