என்.கே.மூர்த்தி
திமுகவை வீழ்த்துவதற்கு வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் போதாது, அதற்கு தேவையான கொள்க திட்டங்கள் வேண்டும்.
தமிழகத்தில் திமுகவை எதிர்த்து அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர். முதல் புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் வரை திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் வருகிறார்கள். அவர்களிடம் திமுக செய்யாததை செய்வதற்கு திட்டங்கள் எதுவும் இல்லை, அப்படி எதாவது செய்ததாக வரலாறும் இல்லை. கலைஞர் கருணாநிதியை எதிர்த்து கட்சியை தொடங்கி காணாமல் போனவர்கள் ஏராளம். தற்போது மு.க.ஸ்டாலினை எதிர்த்து கட்சி தொடங்கி இருக்கிறார்கள்.
கலைஞர் கருணாநிதி மறைவிற்கு பின்னர் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் 39 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று 2021 மே மாதம் 7 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார். அதன் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றியை குவித்து வருகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017 பிப்ரவரி மாதம் 15 தேதி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார். அந்த காலக்கட்டத்தில் இருந்து அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
2021இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. திமுக தனித்து 125 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் -8, விசிக – 4 மதிமுக (உதய சூரியன் சின்னம்) – 4 , சிபிஐ -2, சிபிஎம் – 2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட இதர கட்சிகள் -4 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றியது. அதில் அதிமுக – 65, பாமக – 5, பாஜக – 4, மற்றவை -1 என்று எதிர்கட்சி வெற்றி பெற்றிருந்தது.திமுக – அதிமுகவிற்கும் இடையில் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 3.87 சதவீதம் மட்டுமே.
திமுக – 37.15% , அதிமுக -33.28%, நாம் தமிழர் கட்சி – 6.6%, காங்கிரஸ் -4.28% பாமக – 3.81% ,பாஜக – 2.63% , மக்கள் நீதி மையம் – 2.4%, அமமுக 2.4%,சிபிஐ – 1.09% சிபிஎம் -0.85% , விசிக 1.3%, முஸ்லிம் லீக் – 0.48%
2024இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 26.93 சதவிகிதமும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக 20.46 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது திமுகவிற்கும் அதிமுகவிற்கும் வாக்கு வித்தியாசத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. திமுக 22 தொகுதிகளில் போட்டியிட்டு 26.93% வாக்குகள் பெற்றுள்ளது. 35 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 20.46% வாக்குகள் பெற்று சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் வீழ்த்துவேன் என்று வெறும் கோஷம் மட்டும் இருந்தால் போதுமா? 1967இல் இருந்து திமுகவை அழிக்காமல் விடமாட்டேன் என்று கட்சியை ஆரம்பித்த ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். ஆனால் திமுகவை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.
2021ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தினம் தினம் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்துக் கொண்டே இருக்கிறார். மகளிர் இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், காலை உணவு திட்டம் என்று மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். அவருக்கு நிகராக மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இன்னும் உயரவில்லை.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு 48 சதவிகிதம் வாக்கு வங்கி இருக்கிறது. அதிமுகவிற்கு 20.46 சதவிகிதம் வாக்கு வங்கி இருக்கிறது. நடிகர் விஜய் தொடங்கிய தவெக விற்கு10 சதவிகிதம் வாக்கு வங்கியை சேர்த்தாலும் 30 சதவிகிதம் வாக்கு வங்கியை வைத்து ஆட்சியை பிடிக்க முடியாது. எனவே 2026ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது உறுதி.