காவிரி நதிநீர் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக உருவெடுத்துள்ள மேகதாது அணைப் பிரச்சினையும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்ட மிக முக்கியமான உணர்வுப் போராட்டங்கள் ஆகும். இந்த விவகாரத்தை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதிய ஜனதாவும் தங்களின் சுயநல அரசியல் ஆதாயங்களுக்காக எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள அறிக்கை போர் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.


வார்த்தை போராக மாறிய மேகதாது விவகாரம்
“மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விடுத்த எச்சரிக்கையை, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சூழலில், மாணிக்கம் தாகூரின் பேச்சு வெற்று நாடகம் என்றும், ராகுல் காந்தியிடமோ அல்லது கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரிடமோ பேசி அணை கட்டும் முயற்சியை காங்கிரஸால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் நயினார் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள மாணிக்கம் தாகூர், “தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, பெயரளவிற்கே தப்பிப் பிழைத்துள்ளது” எனச் சாடியுள்ளார். மேலும், “மேகதாது அணை கட்ட மாட்டோம் என்று கர்நாடக பா.ஜ.க. தலைவரிடம் நயினார் நாகேந்திரனால் ஒப்புதல் பெற்றுத் தர முடியுமா?” என்ற எதிர் கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
நதிநீர் விவகாரங்களைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழகத்திற்குத் துரோகம் இழைப்பதில் ஒரே நேர்க்கோட்டில்தான் பயணிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பா.ஜ.க.வின் கடந்த காலப் போக்கு
கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது எடியூரப்பாவும், பசவராஜ் பொம்மையும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று தமிழக எல்லை வரை வந்து முழக்கமிட்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற உத்தரவையும் மீறி, கர்நாடகா விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியது இரு மாநில மோதலைத் தீவிரப்படுத்தியது.
காங்கிரஸின் தற்போதைய நகர்வு:
தற்போதைய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தில் அதிதீவிரமாக உள்ளார். அவரது சொந்தத் தொகுதியான கனகபுரா எல்லைக்குள் இந்த அணை வருவதால், தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும் சுமார் ₹15,000 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த அவர் துடிக்கிறார்.
டெல்லியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. அரசு, இரு மாநிலப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்கும் நடுநிலையான கடமையைச் செய்யத் தவறிவிட்டது. அதே நேரத்தில், மத்தியில் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும், கர்நாடகாவில் தனது சொந்தக் கட்சி ஆட்சியில் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தத் தார்மீகத் துணிவின்றித் தவிக்கிறது.
தமிழகத்திற்கு இழைக்கப்படும் கூட்டுத் துரோகம்
அரசியல் களத்தில் காங்கிரஸும் பா.ஜ.க.வும் மாறி மாறி அறிக்கைப் போர் நடத்தினாலும், அடிமட்ட யதார்த்தம் என்னவோ ஒன்றுதான். கர்நாடகாவில் ஆட்சியைக் கைபற்றவும், அங்குள்ள கன்னட மக்களின் வாக்குகளைக் கவரவும் இரு தேசியக் கட்சிகளுமே தமிழகத்தின் உரிமைகளைப் பலியிடத் துணிகின்றன. தமிழகத்தில் இருகட்சிகளுக்கும் செல்வாக்கு இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஒரு பேச்சையும், கர்நாடகாவில் ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கிறது;
அதேபோல் தமிழக பா.ஜ.க. இங்கும், கர்நாடக பா.ஜ.க. அங்கேயும் இரட்டை வேடமிடுகின்றன. இறுதியில், இந்த இரு தேசியக் கட்சிகளின் சுயநலப் போக்கால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழகத்தின் எதிர்காலமும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.
