
உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு பெயரில் பணம் இருந்து வருகிறது. இந்தியாவிற்கு “பணம்” ரூபாயாக இருப்பதைப் போன்று இங்கிலாந்திற்கு பவுண்ட், சீனாவிற்கு யுவான் என்ற பெயரில் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் வர்த்தகங்கள் செய்வதற்கு அனைத்து நாடுகளும் அமெரிக்காவினுடைய டாலரை பயன்படுத்தி வருகின்றன. எனவே, ஒவ்வொரு நாட்டின் பணத்தின் மதிப்பும் அமெரிக்கா டாலருக்கு இணையான மதிப்பு எப்படி இருக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு டாலரை மற்ற நாடுகள் வாங்க வேண்டும் என்றால் அந்தந்த நாட்டின் பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அளவீடாக வைத்துதான் அந்த பணத்தின் மதிப்பை கணக்கீடு செய்யப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் அமெரிக்கா டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு 3.3 ஆக இருந்தது. 1982 ஆம் ஆண்டு வரை ஒற்றை இலக்கில் ரூபாயின் மதிப்பு இருந்தது. 1983 ஆம் ஆண்டிலிருந்து இரட்டை இலக்குக்கு உயர்ந்த ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென வேகமாக மதிப்பிழக்கத் தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு ரூ.53.44 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருந்தது. இந்த பணவீக்கம் இந்தியாவை எந்த இடத்தில் கொண்டு நிறுத்துமோ என்று பொருளாதார வல்லுனர்கள் கவலைப்பட்டனர்.
கடந்த 21 ந் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89-ஐ கடந்து வரலாற்றில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவிட்டது. தற்போது ரூபாயின் மதிப்பு ரூ.89.89 ஆக உயர்ந்து இறக்குமதி வர்த்தகம் செய்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளது. இறக்குமதி செய்யக்கூடியவர்கள் அதிக பணத்தை செலவழிக்க வேண்டும்.
மேலும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லக் கூடியவர்கள், வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் அதிக பணத்தை செலவழிக்கின்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு குறைவதால் இந்தியா பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு விதித்த 50 சதவீத வரிதான் ரூபாய் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். அதிக வரிவிதிப்பு வந்ததில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். அதேபோன்று தங்கம் விலை உயர்ந்த தையும் மேலும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 3 மாதங்களாக அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் இருந்து எடுத்து செல்வதும் தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
விரைவில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால் ரூபாயின் மதிப்பு அதிவேகமாக ரூ.100 தொட்டுவிடும். அதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலை உயர்வை எவராலும் தடுக்க முடியாது. இந்த ஆபத்தில் இருந்து வெளியில் வர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குட் பேட் அக்லி விவகாரம்: இடைக்கால உத்தரவை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி…


