ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கோஹ்லியின் ஃபார்ம் குறித்து, ‘‘அவர் ஐந்து ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் அடித்திருந்தால் வேறு எந்த வீரரும் அணியில் நிலைத்திருக்க மாட்டார்கள்’’ எனக் கூறி இருந்தார். பாண்டிங்கின் விமர்சனத்துக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டுடன் பாண்டிங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என கோஹ்லியும், ரோஹித்தும் ஆர்வம் காட்டுகிறார்கள். பாண்டிங்கிற்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அதைவிட முக்கியமாக விராட், ரோஹித் பற்றி அவர் எந்த கவலையும் பட வேண்டாம். அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய சாதித்துள்ளனர். எதிர்காலத்திலும் அவர்கள் தொடர்ந்து நிறைய சாதிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் இன்னும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிறார்கள், அவர்கள் இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறார்கள்.
நடப்பு ஆண்டில், கோஹ்லி மற்றும் ரோஹித் ஆகியோர் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய 0-3 தொடரை இழந்தது அவர்கள் மீது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 29.40 சராசரியில் இரண்டு சதங்கள் மற்றும் அரைசதங்களுடன் 588 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம், கோஹ்லி ஆறு போட்டிகளில் (12 இன்னிங்ஸ்) 22.72 சராசரியில் ஒரு அரை சதத்துடன் 250 ரன்கள் எடுத்துள்ளார்.