சத்தீஷ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சோம்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோராடரை கிராமத்தில் இன்று மதியம் 1.30 மணி அளவில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் கிராமத்தினர் மற்றும் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர் அங்கிருந்த மரத்தின் அடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் 6 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் ராஜ்நந்த்கான் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் மோஹித் கார்க் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மின்னல் தாக்கி 8 பேர் பலியான சம்பவம் சத்திஸ்கர் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.