உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது அக்டோபர் 6 ஆம் தேதி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணியை வீசி தாக்குதல் நடத்தினார். இது தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவரை மன்னிப்பதாக கூறியதை அடுத்து போலீசார் விடுவித்தனர். இதனிடையே உச்சநீதிமன்ற பார் கவுன்சில் சார்பில் தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு ஒன்று தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காலணியை வீசிய நபர் ,தான் செய்த செயலை நியாயப்படுத்தி வருவதாகவும், மீண்டும் அதேபோன்று செயலை செய்வதாக கூறும் நிலையில் இது உச்சநீதிமன்ற அவமதிப்பாகும் என தெரிவித்தார்.
மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் இந்த செயலுக்கு தனிப்பட்ட முறையில் அவர் மன்னிப்பு வழங்கியிருக்கலாம். ஆனால் இதில் உச்சநீதிமன்றமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றதோடு சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், எனவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதம் முன் வைத்தனர். அதற்கு நீதிபதி சூர்யகாந்த், இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை மன்னித்து விடுவிக்க கூறியுள்ளார். எனவே மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறோம் எனவும் தெரிவித்தார். இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாது இருப்பதை கருத்தில் கொண்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிடலாம் என்றதோடு, அதற்கான ஆலோசனைகளை வழங்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.



