உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘பெரியண்ணன்’ மனப்பான்மையால் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அங்கு மூன்றாவது அணி உருவாவதற்கான சூழல் கனிந்துள்ளதாகவும் திமுக சிறுபான்மையினர் பிரிவின் மாநில துணைத் தலைவர் அலிம் அல் புகாரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், தேசிய மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:


மாநிலக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தரும் நெருக்கடி
“பீகாரில் தேஜஸ்வி யாதவ், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆகிய பிராந்தியத் தலைவர்களை காங்கிரஸ் கட்சி தனது பிடிவாதப் போக்கினால் எப்படிப் பலவீனப்படுத்தியதோ, அதே உத்தியைத்தான் தற்போது உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவிற்கும் எதிராகக் கையில் எடுத்துள்ளது. 2027 உ.பி சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தன் தகுதிக்கு மீறிய எண்ணிக்கையில் தொகுதிகளைக் கேட்டு சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டைப் போடுகிறது.
பாஜகவின் மதவாத அரசியலை உ.பியில் தீவிரமாக எதிர்த்து வரும் அகிலேஷ் யாதவை நசுக்க நினைப்பது, அங்குள்ள சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகப் பெரிய ஆபத்தில் தள்ளும். காங்கிரஸின் இந்த அணுகுமுறைதான் அங்கு மாற்றுத் திட்டமாக ஒரு ‘மூன்றாவது அணி’ உருவாவதற்கு வழிவகுக்கிறது.”
தமிழக அரசியலில் காங்கிரஸின் ‘திரைமறைவு’ துரோகம்
தமிழக அரசியல் மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்தும் அலிம் அல் புகாரி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “நான் முன்பு இளைஞர் காங்கிரஸில் இருந்தபோதே, தவெக தலைவர் விஜய்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எந்தப் பதிவும் போடக் கூடாது என காங்கிரஸின் தேசிய மற்றும் மாநில தலைமை எனக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்தது. கூட்டணி தர்மத்தை மீறி, தேர்தல் காலத்திற்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் திரைமறைவு இணக்கம் காட்டி வந்தது. தமிழகத்தில் 35% விஜய், 65% ராகுல் காந்தி என்றெல்லாம் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுவது முற்றிலும் தர்க்கமற்றது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கிலேயே காங்கிரஸின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
விஜய் ஒன்றும் கொள்கை ரீதியாகப் பாஜகவை எதிர்ப்பவர் அல்ல. சினிமா கவர்ச்சியை வைத்து ராகுல் காந்தியையே பணிய வைக்கலாம் என்று அவர் கணக்குப்போடுகிறார். வடஇந்தியாவில் மோடியை முன்னிறுத்தியது போல, இங்கும் போலியான பிம்பங்கள் மூலம் விஜய் ஒரு ‘வளர்ச்சி நாயகனாக’ காட்டப்படுகிறார். ஆனால், மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் நெருக்கடி கொடுத்தால் திமுக தலைவர்களைப் போல விஜய்யால் எதிர்கொள்ள முடியாது; அவர் எந்த நொடியிலும் பாஜகவுடன் சமரசம் ஆகிவிடுவார்” என்று அலிம் அல் புகாரி அந்த நேர்காணலில் எச்சரித்துள்ளார்.
