1 மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு
பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துடன் 14 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. பிரதமர் கடந்த மாதம் திறந்து வைத்த மெட்ரோ ரயில் நிலையம் ஒரு மணி நேரம் மழைக்கே தண்ணீரில் தத்தளித்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறிய மழைக்கே நகர சாலைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. நேற்று மாலை பெய்த கனமழையால் பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்திற்காளாகினர்.

குறிப்பாக பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் சென்னை, கோவை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் ஆறு விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
மாலையில் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளிப்பட்ட சாலை, ஒயிட்பீல்டு உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து சென்றன.
பல இடங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. முழங்கால் அளவிற்கு தேங்கிய நீரில் வாகனங்களை தள்ளிக் கொண்டும் நடந்தும் செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டது.
ஒயிட்பீல்டு – கே.ஆர்.புரம் மெட்ரோ வழி தடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் திறந்து வைத்த நிலையில் அதற்கு உட்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு மணி நேரம் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டந்தூர் அக்ரஹாரா மற்றும் நல்லூர்ஹள்ளி மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் நடந்து செல்லும் பாதையில் நீர் தேங்கியது. மெட்ரோ ஊழியர்கள் வாலிகளை கொண்டு தண்ணீரை இறைக்கும் பணியில் இறங்கினார்.