மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரசின் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின. மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதேபோல், 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 2 கட்டடங்களாக நவம்பர் 13ம் தேதியும், நவம்பர் 20ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான கூட்டணியும் மோதின. ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்று முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாலையிலே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வந்த அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வயநாடு, மகாரஷ்டிரா மாநிலம் நாண்டட் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அதிக வாக்குகள் பெற்று வாகை சூடுவாரா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் உத்தரபிரதேசம் உள்பட 13 மாநிலங்களுக்கு உள்பட்ட 46 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது.