கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரபள்ளி ஐடி பூங்காவில் ஜூன் 12 ல், புதன்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராகவும், ஜன சேனா கட்சி (ஜேஎஸ்பி) தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். சந்திரபாபு நாயுடு மற்றும் கல்யாண் ஆகியோருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திரப் பிரதேச பிரிவுத் தலைவர் கே.அச்சன்நாயுடு, ஜனசேனா கட்சியின் அரசியல் விவகாரக் குழுத் தலைவர் நாதெண்டலா மனோகர் உள்ளிட்ட 24 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா மற்றும் பல தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
அதேபோல் முன்னாள் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, இந்திய முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி மேடையில், திரைப்பட நட்சத்திரங்கள் அனைவருடனும் தனிப்பட்ட தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர். பவன் கல்யாண் பதவியேற்ற பிறகு, பிரதமர் அவரையும் அவரது சகோதரர் சிரஞ்சீவின் கரங்களை பிடித்து கொண்டு மேடையின் நடுவே இருவர் கைகளையும் உயர்த்தி பின்னர் கட்டித் தழுவினார், மேலும் அவர்கள் மூவரும் ஆந்திரப் பிரதேச மக்களுக்கு கைகோர்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்ற பின் மேடையில் இருந்த பிரதமர் மோடி உள்ளிட்டோரிடமும் வாழ்த்து பெற்று அவர் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் தனது உடன் பிறந்த அண்ணனும் நடிகருமான சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் இதனை எதிர்பார்க்காத சிரஞ்சீவி கண்கள் கலங்க தன் தம்பி பவனை கட்டி அணைத்தார்